தமிழ்நாட்டில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்கலாமா......? முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்

0 2286

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பன உள்ளிட்டவை தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமே தேர்வுகள் எழுதினர். ஆனால் கொரோனா 2வது அலை வீரியத்துடன் தாக்கியதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் பெருந்தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகின்றன. இதில் 50 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி, சுழற்சி முறையிலான வகுப்புகள், தனிமனித இடைவெளி, வெப்பப் பரிசோதனை என பல்வேறு சுகாதார கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் தொடக்க கல்வி, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகளைத் திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை முதலில் பள்ளிகளை திறக்கலாமா? அல்லது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வரிடம் இன்று அறிக்கையாக சமர்ப்பிக்கிறார். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments