சூரியிடம் கை குலுக்கி வீட்டுக்குள் புகுந்த விஐபி திருடன்..! பப்ளிசிட்டி பைத்தியமாம்..!

0 5918

பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டு நகை திருடுவதை வழக்கமாக வைத்திருந்த நகைகடை உரிமையாளர் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். புரோட்டா சூரிக்கு அறிமுகமானவர் போல வந்து அல்வா கொடுத்த அபேஸ் ஆசாமி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பிரபல காமெடி நடிகர் சூரியின் உடன் பிறந்த சகோதரரின் மகள் திருமண விழா மதுரையில் நடந்தது. இதில் சூரிக்கு அறிமுகமான ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் கூட்டத்தை பயன்படுத்தி மணமகள் அறையில் இருந்து 10 சவரன் நகை திருட்டு போனது சூரியின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பரமக்குடியை சேர்ந்த நகைகடை அதிபர் மணிவாசகத்தின் மகனான விக்னேஸ்வரன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

வழக்கமாக திருடும் ஆசாமிகள் முகத்தை மறைத்துக் கொண்டு செல்லும் நிலையில் நகைதிருடிய விக்னேஸ்வரனோ, எல்லா சிசிடிவியிலும் தனது முகம் தெரியும்படி சென்றதால் எளிதாக அடையாளம் கண்டு 24 மணி நேரத்துக்குள்ளாக காவல்துறையினர் விக்னேஸ்வரனை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் சுய விளம்பரத்துக்காக தான் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதையும், அவர்கள் வீட்டில் திருடுவதையும் வழக்கமாக வைத்திருந்ததாகவும், வெள்ளை சட்டையில் சிரித்த முகத்துடன் செல்வதால் அறிமுகம் இல்லாதவர்கள் கூட எளிதாக தன்னை வீட்டில் சேர்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்த விக்னேஸ்வரன், இதே போல காவல் அதிகாரி ஒருவரது வீட்டிற்குள் புகுந்து அவரது மகள் கழுத்தில் இருந்து வைரநகையை களவாடி மாட்டிக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளான். இவன் மீது மதுரை, சென்னை, சிவகங்கை ஆகிய ஊர்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளது.

முன்னதாக நடிகர் சூரி வீட்டு நிகழ்ச்சியில் நுழையும் போது அபேஸ் ஆசாமி விக்னேஸ்வரனை யார் ? என்பது போல சூரியின் அண்ணன் பார்த்துள்ளார். அதற்குள்ளாக முந்திக் கொண்ட விக்னேஸ்வரன், சூரியிடம் நல்லா இருக்கீங்களா? என்று கைகுலுக்கி சிரித்ததும், சூரியும் பதிலுக்கு வாங்க வாங்க என்று மதுரை தமிழில் வரவேற்றதால் அவருக்கு தெரிந்த விஐபி என்று நினைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மண்டபத்தில் விஐபி போல வலம் வந்த விக்னேஸ்வரன், மணமகள் அறையில் புகுந்து தங்க நகைகளை அபேஸ் செய்துள்ளான் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

அதிமுகவில் வர்த்தக பிரிவில் பொறுப்பு வகித்துவரும் விக்னேஸ்வரனின் தந்தை மணிவாசகம் கூறும் போது, டிவியிலும், பத்திரிக்கையிலும் தனது பெயர் வர வேண்டும் என்ற விளம்பர மோகத்தால் தனது மகன் இது போன்ற விபரீத திருட்டு செயலில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும், சில சமயம் எங்காவது வெளியூரில் இருந்து கொண்டு தன்னை காணவில்லை என்று பேப்பரில் விளம்பரம் கொடுக்க சொல்லி எல்லாம் தன்னை டார்ச்சர் செய்ததாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments