குழந்தையை கொலை செய்த சிறுவர்கள்.. நஞ்சாக மாறிய பிஞ்சு மனங்கள்..! சிவகாசியில் விபரீதம்

0 3304

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, அக்கம்பக்கத்து வீட்டு பிரச்சனையில் 4 வயது குழந்தையை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஞ்சு மனசு கொலை செய்யும் அளவுக்கு நஞ்சாக மாறியதின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சிவகாசி அருகே விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பார்த்திபன் - கவியரசி தம்பதிக்கு 8 வயதில் பிரியதர்ஷன் என்ற மகனும், 4 வயதில் தீனதயாளன் என்ற மகனும் இருந்தனர்.

நேற்று மாலை தீனதயாளன் திடீரென காணாமல் போகவே, எல்லா இடத்திலும் தேடிய பெற்றோர் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன்படி, ஊர் மக்களிடம் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான இரண்டு சிறுவர்கள் தீனதயாளனை அழைத்துச் சென்றதை பார்த்ததாக கிராம மக்கள் சிலர் போலீசாரிடம் கூறியுள்ளனர். இந்த நிலையில், சிறுவன் தீனதயாளனை அழைத்துச் சென்ற 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தீனதயாளன் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தீனதயாளனை அழைத்துச் சென்று சிறுவர்கள் இருவரும் விவசாயக் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூரத் தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பார்த்திபனின் பக்கத்து வீட்டுக்காரரான மூதாட்டி, கட்டுமானப் பணிகளுக்காக வீட்டுக்கு அருகே மணல் இறக்கி கொட்டி வைத்திருந்துள்ளார். அந்த மணலில் பார்த்திபனின் 2ஆவது மகனான தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு மூதாட்டி சத்தம் போட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பார்த்திபனும், சின்ன பிள்ளைகள் விளையாடுவதற்கு ஏன் சத்தம் போடுகிறீர்கள் எனக் கேட்டு பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் இரு குடும்பத்திற்கும் இடையேயான மோதலாக மாறியுள்ளது.

இந்த தகராறை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் இரண்டு பேரன்களின் மனநிலைமை தீனதயாளனை கொலை செய்யும் குரூரம் வரை இழுத்துச் சென்றுள்ளது. கடைக்கு வருமாறு தீனதயாளனை அழைத்துச் சென்ற இருவரும், வீட்டிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த விவசாயக் கிணற்றில் தள்ளிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

பேரதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் பேரில் சுமார் 70 அடி ஆழம் கொண்ட அந்த விவசாயக் கிணற்றில் இருந்து சிறுவன் தீன தயாளனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்ற குழந்தையை இழந்த துக்கம் தாளாமல், தீனதயாளனின் தாயும், அவனது உறவினர்களும் கதறி, கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.

இதனையடுத்து, சிறுவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவனுக்கு 13 வயது, மற்றொருவனுக்கு 11 வயது ஆகும்.

வீட்டில் இருக்கும் பெரியோர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையே பெரும்பாலும் குழந்தைகளும் பின்பற்றும். ஆகையால், குழந்தைகள் முன் வன்மத்தை விதைக்கும் பேச்சுக்களையோ, சண்டைகளையோ தவிர்க்க வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments