டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 1384

டெங்கு போன்ற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் எந்த நடவடிக்கையையும் குறைக்காமல் டெங்கு போன்ற பரவல் நோய்களுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழித்தல் நடவடிக்கைகளை வேகப்படுத்தவும், அனைத்து மருத்துவத் தளவாடங்களுடன் கூடிய குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் வலியுறுத்தி உள்ளார். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் டெங்குக் காய்ச்சலின் பரவல் அதிகமாகி வருவதாகவும் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். 

டெங்குவைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்திற்கான சாதகமான சூழல் நிலவுவதாகக் கூறிய அவர், காய்ச்சல் பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கு விரைவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ள ராஜேஷ் பூஷண், அனைத்து மருத்துவமனைகளிலும் தற்செயல் திட்டங்களைத் தயாரிக்கவும், தேவையான நோயறிதல், மருந்துகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொசு ஒழிப்புக்குத் தேவையான பூச்சிக் கொல்லி மருந்து தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷண் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments