சின்னபுள்ளைக்கு கெட்டிமேளம்... கல்யாண சாப்பாடு ஜெயிலிலே..! கம்பி எண்ணும் மாப்பிள்ளை

0 3590
சின்னபுள்ளைக்கு கெட்டிமேளம்... கல்யாண சாப்பாடு ஜெயிலிலே..! கம்பி எண்ணும் மாப்பிள்ளை

தருமபுரி அருகே 12 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த மாப்பிள்ளை, அவருக்கு மாணவியை திருமணம் செய்து வைத்த இருவரது பெற்றோர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

தருமபுரி மாவட்டம், குப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சச்சின். கட்டிட மேஸ்திரியாக இருந்துவரும் 23 வயதான சச்சினுக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.பி. நகரைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சனிக்கிழமை தருமபுரி அடுத்த தொப்பூர் மாரியம்மன் கோயிலில் இருவீட்டார் சம்மதத்துடன் கெட்டிமேளம் முழங்க மாப்பிள்ளை சச்சின் அந்த மாணவியின் கழுத்தில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு வந்திருந்த உற்றார் உறவினர்களில் சிலர் மணப்பெண் சிறுவயதாக இருப்பதாக பேசிக் கொண்டனர். இந்த தகவல் புகாராக தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலர் ஜோதிமணியின் காதுகளை எட்ட அவர் உடனடியாக திருமண வீட்டிற்கு சென்று விசாரணையைத் தொடங்கினார்.

திருமண நாள் அன்று அந்த மாணவியின் வயது 17 என்பதால் அந்த திருமணம் சட்டப்படி செல்லாது எனவும், அங்கு குழந்தைத் திருமணம் நடந்து இருப்பதையும் உறுதி செய்தார். சிறுமியைத் திருமணம் செய்த மாப்பிள்ளை சச்சின், பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளையின் தந்தை மணி, தாய் வள்ளி, சிறுமியை திருமணம் செய்து கொடுத்த சிறுமியின் தாய் தந்தை ஆகிய 5 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு பரிந்துரைத்தனர்.

அதன் பேரில் புது மாப்பிள்ளை சச்சினையும் , தந்தையார் மணி, தாயார் வள்ளி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் திருமண வாழ்க்கையில் புகுந்து சதம் அடிக்கும் ஆவலோடு காத்திருந்த கட்டிட மேஸ்திரி சச்சின் , சிறுமியை மணந்ததால் டக் அவுட் ஆகி ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments