தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் ; ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

0 2127
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் ; ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திச் சென்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை முழுவதும் 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. புரசைவாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 805 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 620 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. சேந்தமங்கலம் பேரூராட்சியில் 7 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு திமுக சார்பில் தலா 5 முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றன. கள்ளக்குறிச்சி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண்களுக்கு தொண்டு நிறுவனம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் 1 லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கனும், பெண்களுக்கு இலவச எவர்சில்வர் தட்டும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 100 ரூபாய்க்கான செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வழங்கப்பட்டது.

இதேப்போல், மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஆயிரத்து 235 இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1004 இடங்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் இடங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments