நீட் தேர்வை நீக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும்..! முதலமைச்சர் அறிவிப்பு..!

0 1633
நீட் தேர்வை நீக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும்..! முதலமைச்சர் அறிவிப்பு..!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் தனுஷ் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற - நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ - மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் அமைந்து வருவதாக முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். நீட்தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவர்களின் தற்கொலைகளும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடையச் செய்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எனவும், இதனை இந்திய துணைக் கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும் பெரும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருப்பதாகவும், அந்த பொறுப்பை உணர்ந்து நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும் நீக்கும்வரை சட்டரீதியான போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ள முதலமைச்சர், மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments