தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்..!

0 2355
தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 805 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. எட்டயபுரம் அருகே உள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

சென்னை முழுவதும் 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. புரசைவாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதேப்போல், மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஆயிரத்து 235 இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1004 இடங்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் இடங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments