வாழ்ந்தால் உன்னோடு.. இல்லையேல் மண்ணோடு.. காதலனை கரம் பிடித்தார்.!

0 5216

திருவண்ணாமலை அருகே 3 வருடங்கள் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்தவரை காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண் போராடிக் கரம் பிடித்தார்.

வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் 25 வயது மகன் சதீஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரும், மதுராந்தகம் அடுத்த ஓட்டக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் 21 வயதான ராதிகாவும் கடந்த மூன்று வருடங்களாக உருகி உருகி காதலித்ததாக கூறப்படுகின்றது.

அண்மையில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளாமல் சதீஷ் ஏமாற்றி கழற்றி விட்டதாகக் கூறப்படுகிறது

இதனால் மனவேதனை அடைந்த ராதிகா உடல் நலக் குறைவு ஏற்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வாழ்ந்தால் காதலன் சதீசுடன் என்ற கொள்கையில், உறுதியாக இருந்ததோடு, சதீஷை சேர்த்து வைக்கக் கோரி வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராதிகா புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீசார் சதீஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். புது மாப்பிள்ளை சோக்கில் முறுக்கிய சதீஷிடம், டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சதீஷ் ராதிகாவை காதலித்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மகளிர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திருமணம் செய்தால் ஜோடியா வீட்டுக்கு போகலாம், இல்லையென்றால் சிங்கிளா ஜெயிலுக்கு போகவேண்டியது வரும் என்று ஆபிஸ் ரூமில் அறிவுரை கூறிய பின்பு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக மணமகன் சதீஷ் ஒப்புக்கொண்டார்.

இதை அடுத்து காதல் ஜோடி இருவரும் திருமணத்துக்கு அச்சாரமாக உறவினர்கள் முன்னிலையில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலைய வளாகத்தில் வைத்து மாலை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் இதனைத் தொடர்ந்து வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், ராதிகா கழுத்தில் முறைப்படி தாலி கட்டி சதீஷ் திருமணம் செய்து கொண்டார்.

3 வருடங்கள் காதலித்து விட்டு ஆசை தீர்ந்ததும் காதலிக்கு கடுக்கா கொடுத்து, மிடுக்கா எஸ்கேப் ஆக நினைத்த காதலனை ராதிகா, கணக்கா போலீஸ் முன்பு நிறுத்தியதால், காதலிக்கு தாலி கட்டி காதலுக்கு மரியாதை செய்துள்ளார் மாப்பிள்ளை சதீஷ்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments