வாணியம்பாடி கொலை ; கூலிப்படை தலைவன் டீல் இம்தியாசுக்கு வலை

0 14944
கஞ்சா விற்பனையை போலீசுக்கு காட்டிக் கொடுத்ததால் டீல் பிரதர்ஸ் ஆத்திரம்

வாணியம்பாடியில் மனித நேய ஜன நாயக கட்சி பிரமுகர் கொடூரமாக கூலிப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கஞ்சாவியாபாரி டீல் இம்தியாஸ் தலைமையிலான கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்

வாணியம்பாடி மனித நேய ஜன நாயக கட்சி பிரமுகர் வசிம் அக்ரம் தொழுகைக்கு சென்று விட்டு தனது 7 வயது மகனுடன் வீடு திரும்பிய போது அவரை காரில் பின் தொடர்ந்த மர்ம கும்பல், அவரது வீட்டருகே சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இந்த கொடூர காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர் காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பிச்சென்ற வண்டலூர் ரவி மற்றும் டில்லிகுமாரை பிடித்து விசாரித்தபோது இந்த கொலை சம்பவத்தின் திகில் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை பகிரங்கமாக விற்கப்படுவதாகவும் இதனால் இளஞ்சிறார்கள் பலர் பாதிப்புக்குள்ளாவதாகவும் வசிம் அக்ரம் போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்து வந்துள்ளார்.

அந்த தகவலின் பேரில் கஞ்சா கும்பலின் தலைவனாக செயல்படுவதாக கூறப்பட்ட டீல் இம்தியாஸின் ஜீவா நகர் கிடங்கில் இருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டீல் இம்தியாஸ் போலீசில் சிக்காமல் தப்பியதாக கூறப்படுகின்றது.

தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ், தன்னை காட்டிக் கொடுத்ததற்கு பழிவாங்கும் விதமாக சென்னை வண்டலூர் மற்றும் படப்பை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகளிடம் இருந்த கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த கொலை வழக்கில் கஞ்சா வியாபரி டீல் இம்தியாஸ் உள்ளிட்ட கூலிப்படையினரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

வாணியம்பாடி பகுதியில் டீல் பிரதர்ஸ் என்ற அடைமொழியுடன் எப்போதும் நான்கைந்து புள்ளிங்கோ இளைஞர்களுடன் வலம் வரும் டீல் இம்தியாஸ் ஒருமுறை காவல் அதிகாரியை பகிரங்கமாக எதிர்த்து பேசியதால் பிரபலமானதாக கூறப்படுகின்றது.

இதற்க்கிடையே இந்த கொலை சம்பவத்தை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது, பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வசிம் அக்ரமின் இறுதி ஊர்வலத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கஞ்சா விற்பனையை கட்டிக் கொடுத்ததால் பகிரங்கமாக நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர கொலை சம்பவம் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments