சிறுமி உயிரிழந்த விவகாரம்..! அசைவ உணவகங்களில் ஆய்வு..!

0 4100
சிறுமி உயிரிழந்த விவகாரம்..! அசைவ உணவகங்களில் ஆய்வு..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 7 ஸ்டார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்து 30க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், நகரிலுள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 15 கிலோ கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் அண்ணாசாலையில் இயங்கி வரும் செவன் ஸ்டார் பிரியாணி என்ற உணவகத்தில் கடந்த வியாழக்கிழமை பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படும் 10 வயது சிறுமி லோக்ஷனா என்பவர் உயிரிழந்தார். அன்று அந்த உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படும் மேலும் 33 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரணி நகரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட செவன் ஸ்டார் பிரியாணி உணவகத்தை பூட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். உணவக உரிமையாளர் அம்ஜித் பாஷாவையும் சமையல்காரர் முனியாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து ஆரணி நகரிலுள்ள அசைவ உணவகங்கள் அனைத்திலும் ஆய்வை தீவிரப்படுத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், காலாவதியான மூலப் பொருட்களையும் நீண்ட நாட்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் பறிமுதல் செய்து அழித்தனர். மைனஸ் 18 டிகிரி வரை வெப்பநிலை கொண்ட ஃப்ரீசரில் வைக்க வேண்டிய இறைச்சியை சில உணவங்களில் சாதாரண வகை ஃப்ரீசரில் வைத்திருந்ததைக் கண்ட அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுத்தனர்.

உணவகங்களில் தினசரி புதிதாக வாங்கி வரப்படும் இறைச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அதிகாரிகள், இறைச்சிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு பதப்படுத்தி வைக்க வேண்டும் என்றால் அதற்கென பிரத்யேகமாக உள்ள ஃப்ரீசர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments