வாணியம்பாடியில் கட்சி நிர்வாகி படுகொலை... தப்பியோடிய கும்பலுக்கு வலை

0 15479

வாணியம்பாடியில், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த வசீம் அக்ரம், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணைச் செயலாளராக இருந்தார்.

மாலையில் வீட்டின் அருகில் உள்ள மசூதிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென வசீம் அக்ரமை சுற்றிவளைத்து, கீழே தள்ளி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்ட எல்லைகளிலும், சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினரை உஷார் படுத்தினர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டி சத்திரம் சோதனைச் சாவடியில் வந்த காரை மறித்த போலீசார், விசாரணை நடத்தியதில், அதிலிருந்த 2 பேரை கைது செய்தனர்.

எஞ்சிய கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றிருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 11 பட்டாக் கத்திகளையும் கைப்பற்றினர். இதனிடையே, வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து, வாணியம்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.  மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்புக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments