கொரோனா நிலவரம், தடுப்பூசி இயக்கம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

0 1548

ஆக்ஸிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தொடர்பாகவும், தடுப்பூசி இயக்கத்தை ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடந்தது. இதில் கொரோனா சூழ்நிலை குறித்தும், சுகாதார அமைப்புகளின் தயார்நிலை மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் விநியோகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களுக்கு சுமார் ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மூன்று லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இந்த ஆலோசனையின்போது, உருமாறிய கொரோனாவின் தோற்றத்தைக் கண்காணிக்க, நிலையான மரபணு வரிசைப்படுத்தலின் அவசியம் குறித்து பிரதமர் பேசினார்.

மேலும் கொரோனா தடுப்பு அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ், குழந்தை பராமரிப்பு படுக்கை எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்து பிரதமர் பேசியதாகக் கூறப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் ஆயிரத்து 250 ஆக்ஸிஜன் செறிவூட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆயிரத்து 600 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாகவும் பிரதமர் அப்போது கூறினார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments