எல்லா மதங்களையும் கடவுள்களையும் விமர்சிக்கும் ஆசாமி..! விடுவித்த போலீஸ்

0 4478
எல்லா மதங்களையும் கடவுள்களையும் விமர்சிக்கும் ஆசாமி..! விடுவித்த போலீஸ்

அனைத்து மதக்கடவுள்களையும், மதங்களையும் இழிவு படுத்தி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வரும் ஆசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் , போலீஸ் விசாரணைக்கு ஆதரவாளர்களுடன் ஆஜரானதால்  நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்டதால் சர்ச்சை உருவாகியுள்ளது  

சென்னை அன்னை இந்திரா நகர் புத்தகரத்தில் 'யோக குடில்' என்ற பெயரில் சிவக்குமார் என்பவர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். 'வல்லரசு' என்ற பெயரில் கட்சி ஒன்றையும் துவங்கி, அதற்கு தலைவராகவும் உள்ளார். இவர் தனது யூ-டியூப் சானலில், இந்து மதம் உட்பட பல்வேறு மதப்பிரிவு களையும், மதகுருமார்களையும் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவருவதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னேரி போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், திருச்சி புத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிவக்குமார் மீது உறையூர் காவல் நிலையத்தில் புதிதாக புகார் அளித்தார்
அதில், தாங்கள் சாதி, மத வேறுபாடின்றி, 69 சாதிகளைச் சேர்ந்தவர்கள், 'மறலி கை தீண்டாசாலை ஆண்டவர்கள் மெய் மதம்' என்று ஒருங்கிணைந்துள்ளதாகவும், தங்களது மெய்வழி சமூகத்தினரை இழிவுப்படுத்தி, அவதூறாக பேசி, யூ டியூப்பில் சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். நபிகள், இயேசு, சிவப்பெருமாள், வள்ளலார் குறித்தும் அவதூறாகவும் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.

இதன்மூலம் மத உணர்வுகளைப் புண்படுத்தி, மதச் சண்டையை தூண்டும் வகையில் அருவெறுக்கத்தக்க வகையிலும் பேசிவரும் சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது இணைய தளத்தை முடக்க வேண்டும்' என்று மணிகண்டன் தெரிவித்திருந்தார்.

மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், சிவக்குமார் மீது, 153, 504 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்கு விசாரணைக்காக சிவக்குமாருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் செல்லாத நிலையில் சிவக்குமார் மீது, திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட, 80க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. அவரது யூ ட்யூப் சானல் குறித்தும் 300க்கும் மேற்பட்டோர் , யூடியூப் நிறுவனத்துக்கு ரிபோர்ட் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலை, 20க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் கட்சிக்கொடிகள், கழுத்தில் மாலை, கண்ணில் கூலிங் கிளாஸ் சகிதமாக சிவக்குமார் உறையூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரது ஆதரவாளர்கள் அனைவரும் காவல்நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். மேலும், காவல் நிலையத்திற்குள்ளாக மொபைல் போனில் படம் பிடித்து, முக நூலில் நேரடி ஒளிபரப்பும் செய்தனர்.
இதற்கு காவல்துறையினர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து, காவல் நிலையத்தில் இருந்து சிவக்குமாரும், அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர்.

அதன்பின்னர், இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சிவக்குமாரிடம் வழக்கு குறித்து விசாரணை நடத்தினார். "நான் எனது ஆதரவாளர்களுடன் தனியறையில் பேசுகிறேன். உலகமெங்கும் உள்ள ஆதரவாளர்கள் பார்ப்பதற்காக யூ டியூப்பில் பதிவிடுகிறேன். மதப்பற்றாளர்கள் என் பேச்சைக் கேட்க வேண்டாம். வீடியோவை பார்க்க வேண்டாம் என்று முன்பே தெரிவித்து விட்டுதான் பேசுகிறேன் என்று சிவக்குமார் விளக்கம் அளித்ததாக தெரிவித்தார்.

அத்தோடு நான் பேசிய வீடியோ அனைத்தும் யூ டியூப்பில் உள்ளது. அதில் எந்த வீடியோவையும் நான் அழிக்கவில்லை. அழிக்கவும் மாட்டேன்.
இதற்காக வழக்கு என்றால் அதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். என்ற சிவக்குமார் மீது காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அங்கிருந்து அனுப்பிவைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments