காதலனுக்கு டும் டும்..! காதலியின் கலாட்டா..! கலங்கிய சொந்தங்கள்..! மண்டப வாசலில் கத்தி கூச்சலிட்டார்..!

0 28762
காதலனுக்கு டும் டும்..! காதலியின் கலாட்டா..! கலங்கிய சொந்தங்கள்..! மண்டப வாசலில் கத்தி கூச்சலிட்டார்..!

சென்னையில் காதலித்த நர்ஸை ஏமாற்றிவிட்டு திருவாரூரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்த பாதிக்கப்பட்ட பெண் ஒற்றை ஆளாக போராட்டத்தில் குதித்தார். திருமண மண்டபத்துக்குள் புகுந்து காதலி வைத்த கச்சேரியால் மிரண்டுபோன மாப்பிள்ளை வீட்டாரின் கலக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நல்லிச்சேரியைச் சேர்ந்தவர் செல்வி. 32 வயதான இவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். 
சென்னையில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்த செம்மங்குடியை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் செல்வியை காதலித்து நெருங்கி பழகியதோடு, திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாகவும், இருவரும் வேறு வேறு சாதி என்பதால் செல்வியுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டு சில ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலைபார்த்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய செந்தில்முருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாக செல்விக்கு தகவல் கிடைத்துள்ளது. செந்தில்முருகனின் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பாதிக்கப்பட்ட செல்வி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் புதன்கிழமை திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் செந்தில்முருகனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருமணத்தை தடுத்து நிறுத்த ஆவேசமாக வந்த காதலி செல்வி, மண்டபத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காதலி செல்வியால் பிரச்சனை வரும் என்பதை அறிந்த மாப்பிள்ளை வீட்டார் முன் கூட்டியே போலீசாரை மண்டபத்துக்கு அருகில் பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்திருந்ததால் அவர்கள் செல்வியை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி மண்டப பந்தலுக்குள் நுழைந்து கூச்சலிட்ட செல்வியை மாப்பிள்ளையின் உறவினர்கள் கையை பிடித்து இழுத்து ஓரமாக மறைத்து நிற்க வைத்தனர். கையை பிடித்து இழுத்ததாக புகார் அளிப்பேன் என்று சத்தமிட்டதால், கையை விட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.

பின்னர் அங்கு வந்த செல்வியின் சகோதரர் அவரை கையை பிடித்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச்சென்றார். ஆனாலும் அங்கிருந்து செல்ல மறுத்து செல்வி அடம்பிடித்தார். இதற்கிடையே காதலியின் கலாட்டா ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க , மாப்பிள்ளை செந்தில் குமார் திட்டமிட்டபடியே தனக்கு பார்த்த மணப்பெண்ணின் கழுத்தில் தாலிகட்டினார். அவரது திருமணம் நடந்தது தெரியவந்ததும், மீண்டும் சென்று கத்தி கூச்சலிட்டு செல்வி ரகளை செய்ததால் செந்தில்குமாரின் சென்னை காதல், இரு வீட்டார் உறவினர்கள் மத்தியில் அம்பலமானது.

தன்னிடம் இருவரும் நெருக்கமாக உள்ள புகைபட ஆதாரங்கள் உள்ளது என்று செல்வி கூறியதால் இந்த பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் வைத்து பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி செல்வியையும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் சிலரையும் போலீசார் அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

காதல் வயப்படும் ஆணோ, பெண்ணோ, தங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதற்கு முன்பாக எல்லைமீறாமல் கண்ணியத்துடனும் , கட்டுப்பாட்டுடனும் பழகினால் இது போன்ற வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும் என்கின்றனர் காவல்துறையினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments