வெடிபொருட்களுடன் கார்- அம்பானியிடம் பணம் பறிக்கும் திட்டம்

0 3535

செல்வந்தர்களை மிரட்டியும், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்கிற பீதியை ஏற்படுத்தியும் அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் திட்டத்தில் தான் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டதாக என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி மும்பையில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடான அன்டிலியாவுக்கு அருகே வெடிக்க கூடிய 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதம் ஒன்றுடன் ஒரு ஸ்கார்பியோ கார் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும், மும்பை போலீசின் கிரைம் இன்டலிஜன்ஸ் பிரிவு தலைவராக இருந்த உதவி ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட பல போலீசார் அங்கு வந்தனர்.

ஆனால் அந்த காரை அங்கு நிறுத்தியவரே சச்சின் வாஸ்தான் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் காவல் உதவி ஆய்வாளராக இருந்த சச்சின் வாஸ், முன்னாள் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா உள்ளிட்ட 5 போலீசார், முகேஷ் அம்பானியை மிரட்டி பணம் பறிப்பதற்காக காரில் வெடிபொருட்கள் மற்றும் மிரட்டல் கடிதத்தை  வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரனை கொன்றதும் இவர்களே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை திசை திருப்புவதற்காக இவர்கள்  டெலகிராம் செயலி வாயிலாக ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் மிரட்டல் செய்தியை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்திற்காக ஓபராய் ஓட்டலில் 100 நாட்கள் போலி பெயரில் அறை எடுத்து அவர் தங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தமது காரை காணவில்லை என மன்சுக் ஹிரானை போலீசில் பொய்ப் புகார் கொடுக்க வைத்த சச்சின் வாஸ், அதன்பின்னர் அவர் இந்த சதிக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் கொன்று விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக கூலிப்படைக்கு சச்சின் வாஸ் 45லட்சம் ரூபாய் கொடுத்த தாகவும் நீதிமன்ற விசாரணையில் அரசு தரப்பு தெரிவித்தது. 

சாட்சியங்களை இல்லாமல் ஆக்குவதற்காக அம்பானியின் வீடு இருக்கும் பகுதியின் டிஜிட்டல் சிசிடிவி பதிவுகளை எடுத்துச் சென்று குர்லாவில் மிதி நதியில் சச்சின் வாஸ் போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பானியின் வீடான அன்டாலியாவின் அருகே மர்ம கார் நிறுத்தப்பட்டதை ரிலையன்ஸ் நிறுனத்தில் பாதுகாப்பு விவகாரங்களை கவனிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார் என என்ஐஏ குறிப்பிட்டுள்ளது. புழுதி படிந்த அந்த காரின் நம்பர் பிளேட் புதியது போல இருந்ததை கண்ட அவர், அந்த நம்பர் பிளேட்டில் அம்பானி குடும்பத்தின் பாதுகாப்பு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்களின் கடைசி 4 இலக்கங்கள் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தே அதிகாரிகளை உஷார்படுத்தியுள்ளார்.

அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் பாதுகாப்பு  வாகனங்களில் ஒன்றான ரேஞ்ச் ரோவரின் பதிவெண் வெடிபொருள் இருந்த காரில் பொருத்தப்பட்டிருந்துதும் அவரது சந்தேகத்தை அதிகரிக்க செய்து போலீசாரை வரவழைக்க காரணமாக இருந்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments