மந்திரவாதியுடன் காதல்... சிறுவனுக்கு சிகரெட்டால் சூடுவைத்த கொடூர பெண்..!

0 5012
மந்திரவாதியுடன் காதல்... சிறுவனுக்கு சிகரெட்டால் சூடுவைத்த கொடூர பெண்..!

கடலூரில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்த மந்திரவாதியின் ஆசைவார்த்தைக்கு மயங்கி காதலில் விழுந்த பெண் ஒருவர், பெற்ற மகனை மந்திரவாதியுடன் சேர்ந்து சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் கடலூரில் பால்கோவா கடை நடத்திவந்தார். தனது முதல் மனைவி சென்னையில் வசித்து வந்த நிலையில் கடலூரில் உள்ள தாயை கவனித்துக் கொள்ள வீட்டு வேலைக்கு வந்து சென்ற செஞ்சியை சேர்ந்த சாந்தி தேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. சாந்தி தேவிக்கு 12 வயதில் மகன் உள்ள நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது முதல் மனைவியுடன் சென்னைக்கு சென்ற ஹரிகிருஷ்ணன் அங்கு புற்று நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் சாந்திதேவி துணிக்கடை ஒன்றில் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.பள்ளிக்கூடம் திறக்காததால் இவர்களின் மகன் வீட்டில் இருந்தபடியே ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சாந்திதேவியை சந்தித்த மந்திரவாதி சுலைமான் முகமது என்பவன் , உனது குடும்பத்திற்கு பில்லிசூனியம் வைத்திருப்பதால் கணவனை இழந்து கஷ்டப்படுவதாகவும், அதனை தனது மந்திர சக்தியால் எடுத்து தருவதாகவும் கூறி , இரவு நேர பூஜைக்கு வந்து சென்றுள்ளான். அப்போது , சாந்திதேவியிடம் புது வாழ்வு தருவதாக ஆசைவார்த்தை கூறி அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான் மந்திரவாதி சுலைமான்..!

தங்கள் காதல் வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதி சாந்திதேவியின் மகனை சிகரெட்டால் சூடு வைத்து விட்டை விட்டு வெளியே துரத்துவதை வாடிக்கையாக்கியுள்ளான் சுலைமான். உடலில் சூடுபட்ட ரணத்துடன் அந்த சிறுவன் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோவில் படுத்து உறங்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளான்.

கடந்த இரு வாரகாலமாக மந்திரவாதியும் , காதல் மயக்கத்தில் சுற்றிய சாந்திதேவியும் சேர்ந்து சிறுவனை கை, கால் , முதுகு என உடலில் பல இடங்களில் சூடுவைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த நிலையில் வலி தாங்க இயலாமல் பரிதவித்த அந்த சிறுவன், அக்கம் பக்கத்தில் உதவி கேட்க மந்திரவாதி சுலைமானுக்கு தெரிந்தால் தங்கள் வீட்டிற்கு செய்வினை வைத்து விடுவான் என்று அஞ்சி சிறுவனுக்கு உதவ மறந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

பில்லி சூனியம் எல்லாம் மூட நம்பிக்கை என்பதை அறிந்த ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி தன்னை காவல்துறையிடமோ அல்லது வேறு எங்கேயாவது கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று சிறுவன் கதறி அழுதுள்ளான். அவனது சுடு காயங்களை பார்த்து பதறிபோன அந்த நல்ல மனசுக்காரர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார், சாந்திதேவி வீட்டிற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் , காமம் கண்ணை மறைத்ததால் மந்திரவாதியுடன் சேர்ந்து பெற்ற தாய் செய்த சித்ரவதை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மந்திரவாதி சுலைமானையும் சாந்திதேவியையும் போலீசார் கைது செய்தனர். சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் அளித்து சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செய்வினை, பில்லி, சூனியம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை மனதில் விதைக்கும் மந்திரவாதிகளின் ஆசைவார்த்தைகளை நம்பினால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சித்ரவதை சம்பவம்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments