வழுக்கையில் வழுக்கி விழுந்த பெண்கள் விக் வைத்து மோசடி..! ரூ.75 லட்சங்கள் அபேஸ்..!

0 4001
வழுக்கையில் வழுக்கி விழுந்த பெண்கள் விக் வைத்து மோசடி..! ரூ.75 லட்சங்கள் அபேஸ்..!

வழுக்கை தலையில் விக் வைத்து, ஸ்மார்ட் பாய் போல புகைபடங்களை மேட்ரிமோனியல் இணையதளங்களில் பதிவேற்றம் செய்து , வரன் தேடிய இளைஞர் ஒருவர் தன்னை ஐஐடி என்ஜினியர் என கூறி பல பெண்களிடம் 75 லட்சம் ரூபாய் வரை வாரிச்சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அட்டன்கி மண்டலம், கோடிகாலபுடி கிராமத்தை சேர்ந்தவன் சீனிவாஸ். ஹைதராபாத்தில் எம்.சி.ஏ. முடித்த பிறகு, கான்பூர் ஐ.ஐ. டியில் படித்து வந்த இவன் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளான். சில ஆண்டுகள் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளான்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தனது வழுக்கை தலையில் விக் வைத்து ஸ்மார்ட் பாய் போல தன்னை போட்டோ எடுத்து அதனை பல்வேறு திருமண இணையதளங்களில் பதிவு செய்துள்ளான் சீனிவாஸ். இந்த பூனையும் பால்குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு, வரன் தேடி தன்னை தொடர்பு கொள்ளும் இளம் பெண்களுடன் அறிமுகமாகி நெருங்கி பழகியுள்ளான். ஓங்கோலைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் 27 லட்சம் ரூபாயும் 2018 ஆம் ஆண்டு, நரசராப்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் 40 லட்சம் ரூபாயும் வசூல் செய்து உழைக்காமல் சொகுசு வாழக்கை வாழ்ந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்களை கைவிட்டு தப்ப முயன்ற போது பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் உதவியை நாட, பெண்களை ஏமாற்றிய வழக்கில் இரு முறை கைதாகி சிறைப்பறவையாகி இருக்கின்றான் சீனிவாஸ்.

ஜாமீனில் வெளியே வந்த சீனிவாஸ் மீண்டும் திருமண இணையதளங்கள் மூலம் இளம் பெண்களுக்கு வலை விரித்துள்ளான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சித்தூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமண இணையதளத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தான். மதனப்பள்ளியில் உள்ள மற்றொரு பெண்ணிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, பெங்களுரு செல்ல காத்திருந்த போது அவனை சித்தூர் போலீசார் கைது செய்தனர். ஸ்மார்ட் பாய் சீனிவாசிடத்தில் கஞ்சாவும் பிடிபட்டது. அவனை போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது அவனது தலையில் இருந்த விக் கழண்டு விழுந்துள்ளது. அப்போது தான் அவன் வழுக்கை தலையை மறைத்து விக் வைத்து பெண்களை தனது காதல் வலையில் வழுக்கி விழ வைத்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சினிவாசிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கழண்டு விழுந்த ஒரு விக் மற்றும் இரண்டு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருமணத்துக்கு வரன் தேடும் போது மாப்பிள்ளையின் தலைமுடியை பிடித்து இழுத்து பார்க்கிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் தங்களிடம் அறிமுகமான மாப்பிள்ளை சொல்லும் தகவல்களை விசாரித்தாலே உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் காவல்துறையினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments