இளைஞரை திருமணம் செய்ய இரு பெண்களுக்கு இடையே போட்டி: டாஸ் போட்டு முடிவு செய்த பஞ்சாயத்து..!

0 7505

ஒரே இளைஞனை திருமணம் செய்து கொள்ள 2 இளம்பெண்கள் போட்டிபோட்டதால், அதில் யாருக்கு மூன்று முடிச்சு போடுவது என்பதை முடிவு செய்ய ஊர் பஞ்சாயத்து கூடி டாஸ் போட்ட சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறியுள்ளது. ராஜராஜ சோழன் நான்...என உல்லாசமாக பாட்டுப்பாடி, இரட்டைவால் குருவியாக இருக்க ஆசைப்பட்ட நாணயமற்ற இளைஞருக்கு நாணயத்தை சுண்டி நடைபெற்ற திருமணம் குறித்து விளக்கும் செய்தித் தொகுப்பு..

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரை (Sakleshpur) சேர்ந்த 27 வயது இளைஞன், இரு இளம்பெண்களை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை சந்தித்து, இரட்டை வால் குருவி போல இருவரிடமும் இளைஞன் காதலை வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப, இளைஞனின் குட்டு, திருமண பேச்சுவார்த்தை எடுத்தபோது, பெண்ணின் உறவினர் ஒருவர் மூலம் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு இரட்டை வால் குருவியின் செட்டையை முறிக்கும் அளவுக்கு அந்த பெண்கள் கோபப்பட்டிருப்பார்கள் என நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான். அந்த இளைஞனை யார் திருமணம் செய்து கொள்வது என இருவருக்கும் இடையே கடும்போட்டி ஏற்பட்டு, குடுமிப்பிடி சண்டை அளவுக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் பெரியவர்களின் சமாதானம் எடுபடவில்லை. வேறு வழியின்றி, விளையாட்டுப் போட்டிகளைப் போல டாஸ் போட்டு பிரச்சனையை தீர்க்க ஊர் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு 2 இளம்பெண்களும், இளைஞரும் சம்மதித்ததை அடுத்து, ஒரு சுபயோக மங்கள தினத்தில் டாஸ் போட்டுள்ளனர். பூ விழுந்த பெண்ணுக்கு 'தல'யை திருமணம் செய்து வைக்க முடிவானது. அப்போது டாஸில் தோற்ற பெண், ஸ்போர்ட்டிவாக வெற்றி பெற்ற பெண்ணை கட்டியணைத்து, கை குலுக்கிச் சென்றதுதான் ஹைலைட்...

சக பெண்ணிடம் கைகுலுக்கினாலும், இரட்டை வால் குருவியாக இருக்க ஆசைப்பட்ட இளைஞனுக்கு கன்னத்தில் ஒரு பளார் விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பிறகு, பெரியவர்கள் முன்னிலையில், டாஸ் வென்ற இளம்பெண்ணுடன் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இரு இளம்பெண்கள் போட்டியில் டாஸ் போட்டு மணமகன் முடிவு செய்யப்பட்ட இந்த திருமணம், நவீன சுயம்வரமா என சமூக வலை தளங்களில் கிண்டல் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments