போலி டி.ஐ.ஜி யுடன் டக்கரா சிக்கினாங்கோ இன்ஸ்பெக்டரக்கா ..!

0 3910
போலி டி.ஐ.ஜி யுடன் டக்கரா சிக்கினாங்கோ இன்ஸ்பெக்டரக்கா ..!

நாகப்பட்டினத்தில் கடை கடையாக மிரட்டி ஓசியில் பொருட்களை வாங்கிச்சென்ற போலி டிஐஜி கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுனரான காதலனை, வட மாநில டிஐஜி என்று சிபாரிசு செய்த பெண் காவல் ஆய்வாளர் விசாரணை வளையத்தில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

நாகப்பட்டினம் புதிய கடற்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 24 ம் தேதி காரில் வந்த மர்ம நபர் பொருட்களை வாங்கிக் கொண்டு, தன்னை டிஐஜி என்றும், 'நான் கூப்பிட்டால் நாகை எஸ்பி உடனே வருவார்; அப்படி இருக்கும் போது என்னிடமே பணம் கேட்கிறாயா?' என மிரட்டிச் சென்றுள்ளார். இதேபோல கடந்த 28ம் தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும் ரவி என்பவரிடம் காரில் வந்த நபர், ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி கொண்டு, தன்னை டிஐஜி எனக் கூறி பணம் கொடுக்காமல் மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

இந்த இரண்டு புகார்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பதையும் அவர் போலி டிஐஜியான மதுராந்தகத்தை சேர்ந்த மகேஷ் என்பதையும் கண்டறிந்தார். மகேஷை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்காக வெளிப்பாளையம் காவல் நிலையம் வருமாறு அழைத்தார். அதற்கு மகேஷ், தன்னை காவல் ஆய்வாளர் கவிதா என்பவரின் உறவினர் என்றும், தான் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதாகவும் தெரிவித்தார்

சிறிது நேரத்தில் விசாரணை அதிகாரியான தியாகராஜனை தொடர்பு கொண்ட காவல் ஆய்வாளர் கவிதா, மகேந்திர வர்மன் தனது கணவர் என்றும், அவர் குஜராத்தில் டிஐஜியாக இருப்பதாகவும், தற்போது அறுவை சிகிச்சைக்காக ஊருக்கு வந்திருப்பதாகவும், அவரை எப்படி விசாரணைக்கு அழைப்பீர்கள்? என்று மிரட்டும் தோரணையில் பேசியதோடு, இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பியிடம், தான் பேசிவிட்டதாகக் கூறினார்

இருந்தாலும் விடாத தியாகராஜன், காவல் ஆய்வாளர் கவிதாவிடம், "எஸ்.பி சார்கிட்ட சொன்னாலும் பரவாயில்லை- விசாரணைக்கு வரச்சொல்லுங்கள்" என்று கறார் காட்டியதால் கார் ஓட்டுனரான காதலனுக்கு டிஐஜி வேஷம் கட்டிய பெண் காவல் ஆய்வாளரின் மோசடி வேலை அம்பலமானது.

50 வயதான காவல் ஆய்வாளர் கவிதா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் கவிதா சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது அவரிடம் மகேஷ் ஓட்டுனராக பணிபுரிந்துள்ளான். அப்போதே இருவருக்குள்ளும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாக கூறப்படுகின்றது.

கவிதா பணி உயர்வு பெற்று நாகையில் இன்ஸ்பெக்டராக வந்தவுடன், அங்கு வந்த மகேஷ் தனது பெயரை மகேந்திரவர்மா என்று மாற்றி கொண்டு வடமாநிலத்தில் டிஐஜியாக வேலை பார்த்து வருவதாகவும், இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவின் கணவர் எனவும் கூறிக் கொண்டு, காரில் டிப்டாப்ஆக உடை அணிந்து நாகையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் காவல்துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கித் தருவதாகக் கூறி மகேந்திரவர்மா மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரவர்மா என்கிற மகேஷை கைது செய்தனர். கவிதாவும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது அவர் பேசிய ஆடியோ மூலம் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் கவிதாவிடம், காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments