கள் பானைகள், வௌவால் கடித்த பழங்கள்: எப்படி பரவுகிறது நிபா?

0 3759
கள் பானைகள், வௌவால் கடித்த பழங்கள்: எப்படி பரவுகிறது நிபா?

கேரளாவில் நிபா வைரசுக்கு 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநிலத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்க்கொல்லியான நிபா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை பார்க்கலாம்.

நிபா  வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று வகையை சேர்ந்ததாகும். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாகவும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது.  வைரசால் பாதிக்கப்பட்டோரின் எச்சில், சளி உள்ளிட்டவற்றின் மூலம் குடும்பத்தினருக்கும், நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களுக்கும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காற்றின் மூலம் பரவுவதில்லை. முதன் முதலில் 1998ஆம் ஆண்டில் மலேசியாவில் காம்புங் சுங்காய் நிபா  என்ற ஊரில்தான் இந்த வைரஸ் தாக்குதல்  கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் பழந்தின்னி  வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது. நிபா வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்படும்.

கடுமையான காய்ச்சல், தலைவலி, மனக்குழப்பம், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதோடு, நோயாளி கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உண்டு. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உன்னிப்பாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும். நிபா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்துகள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோயை பரப்பக்கூடிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோல், மரங்களில் இருந்து விழுந்த பழங்களை உண்ணுவதையும், பதப்படுத்தப்படாத கள்ளை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு, பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், எல்லை மாவட்டங்கள் வழியாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு நிபா வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கேரளத்தில் இருந்து வருபவர்களுக்கு, நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் வெளிப்பட, 6 முதல் 21 நாட்கள் வரை ஆகலாம் என்பதால், நிபா பாதித்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கும் முறை உள்ளிட்டவற்றிற்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments