பெற்றோரை காவு வாங்கிய ஆசை மகளின் காதல் திருமணம்..!

0 10629
பெற்றோரை காவு வாங்கிய ஆசை மகளின் காதல் திருமணம்..!

திருப்பூர் அருகே,  காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறி, காதலனுடன் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை  வாட்ஸ்அப்பில் அனுப்பிய மகளின் செயலால், மனமுடைந்த பெற்றோர் விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் - அவிநாசி தாலுகா, குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஜனனி என்ற மகள் உள்ளார். ஒரே மகள் என்பதால் பெற்றோர் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். ஜனனி கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி மருத்துவராக மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், தனது வீட்டிற்கு அருகே கோழி இறைச்சிக் கடை நடத்திவரும் நபரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இறைச்சிக் கடைக்காரருக்கும் ஜனனிக்கும் அதிக வயது வித்தியாசம் என்பதாலும், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததாலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனனியின் பெற்றோர், படித்து முடித்ததும் நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைப்பதாக அறிவுரை கூறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் சனிக்கிழமை இரவு தனது தந்தையின் செல்போனில் உள்ள வாட்ஸ் அப்பிற்கு ஜனனி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இறைச்சிக்கடை காதலனை கோவையில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறி இருந்த அவர், காதலனும், தானும் மாலையும் கழுத்துமாக சிரித்தபடி நிற்கும் போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜனனியின் பெற்றோர் ஒரே மகள் தங்களது சொல்பேச்சைக் கேட்காமல், காதலனை திருமணம் செய்ததை நினைத்து மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சிறுவயதில் இருந்தே தங்கள் மகளின் எதிர்காலத்திற்கு எது சிறப்பாக இருக்கும் என்று பார்த்து பார்த்து வளர்த்து ஆளாக்கி பல லட்சங்களை செலவழித்து மருத்துவம் படிக்க வைத்த நிலையில், தங்கள் ஒரே மகள் காதல் எண்ணும் மாயவலையில் சிக்கி திசைமாறிச் சென்றதால், மனமுடைந்த பெற்றோர் தூக்கு கயிறு மாட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

தூக்கு மாட்ட கயிறு எட்டாத காரணத்தால், தென்னை மரத்திற்கு போடும் விஷமாத்திரையை வாழைப்பழத்தில் வைத்து தாய் தந்தை இருவரும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாக இருவரும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குன்னத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரே மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் ஆசை ஆசையாய் வளர்த்த பாவத்துக்கு பெற்றோரை காலனிடம் காவுகொடுத்த மகளின் காதல் திருமணம், மனதில் என்றென்றும் தீராத ரணம் என்று உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments