சிக்கிய "கூட்டாஞ்சோறு" கொள்ளையர்கள்... காட்டிக்கொடுத்த "வெள்ளைச் செருப்பு"

0 3960

சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கூட்டாஞ்சோறு குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி நீண்ட நாட்களாக போலீசில் சிக்காமல் தப்பித்து வந்தவர்களை அவர்களில் ஒருவன் அணிந்திருந்த வெள்ளை நிற செருப்பு காட்டிக் கொடுத்துள்ளது. 

கடந்த 18ஆம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஒன்பது சவரன் நகையை பறித்துச் சென்றனர். அதற்கு அடுத்த நாளில் அண்ணா சாலை தர்கா பகுதியில் சாந்தி என்ற பெண்ணை தாக்கி 4 சவரன் நகையை அறுத்து சென்றுள்ளனர்.  அடுத்தடுத்த நாட்களில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன.

விசாரணையில் இறங்கிய திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அத்தனை சம்பவங்களிலும் ஒரு இளைஞன் மட்டும் வெள்ளைச் செருப்பு அணிந்திருப்பது தெரியவந்தது. அதனை வைத்தே ஒரே கும்பல்தான் அனைத்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டது என்பதை கண்டறிந்தனர். இதனிடையே எழும்பூர் காவல் உதவி ஆணையர் ரகுபதி தலைமையிலான போலீசாரும் இந்த கும்பல் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை திருவல்லிக்கேணி ,அண்ணாநகர் வழியாக குமரன் நகர் வரை திருடர்கள் சென்ற, சுமார் 400 சி சி டிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி அதை வைத்து கொள்ளையடிப்பதும், அந்த வாகனத்தை வைத்து போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, வேலை முடிந்ததும் அந்த இடத்திலேயே வாகனத்தை விட்டுவிட்டு, வேறொரு வாகனத்தைத் திருடி கொள்ளையில் ஈடுபடுவதும் என திட்டம்போட்டு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது அந்த திருட்டுக் கும்பல். மேலும் தாங்கள் திருடும் நகைகளில் முழு நகையை 4 பாகங்களாக பிரித்து, வெவ்வேறு இடங்களில் விற்று, பணம் வாங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

குமரன் நகர் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கில் கைதான 17 வயது சிறுவன் அந்தக் கும்பலை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவன் கொடுத்த தகவலின்படி அத்திப்பட்டு பகுதியில் கூவத்தின் நடுவே வீடு ஒன்றில் பதுங்கியிருந்த மூன்று பேரை போலிசார் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் மூவரும் கிருபாநந்தன், பால் சிவா (எ) சிவகுமார், அயனாவரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு மட்டுமல்லாமல் கடையை உடைத்து திருடுவது, பேட்டரி திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது, வழிப்பறிகளில் ஈடுபடுவது போன்ற அனைத்து வகையான குற்ற சம்பவங்களிலும் குழுவாகச் சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

குழு குழுவாக பிரிந்து திருடி மொத்தமாக ஒரு இடத்தில் சேர்த்து வைத்து பின்னர் பிரித்துகொள்வதால், இவர்களை கூட்டாஞ் சோறு திருடர்கள் என போலீசார் கூறுகின்றனர். இந்தக் கொள்ளையர்களில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவனைத் தேடி வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் கிடைத்த பொருட்களை விற்று அதில் வரும் பணத்தை வைத்து மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகளுடன் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இவர்களிடமிருந்து 16 சவரன் நகைகள் மற்றும் 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments