"நெடுஞ்சாலையில் கொள்ளை கும்பல்" விளம்பர விரும்பியின் வீடியோ அட்டகாசம்.. மன்னிப்புக் கேட்க வைத்த போலீசார்..!

0 11136

மதுரை - இராமநாதபுரம் சாலையில் வாகன ஓட்டிகளிடம் நூதன முறையில் கொள்ளை நடப்பதாகக் கூறி வீடியோ உருவாக்கி சமூக வலைதளங்களில் பரவவிட்டு பீதியைக் கிளப்பிய வெற்று விளம்பர விரும்பி, போலீசாரிடம் சிக்கியதும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது கல்லெறிந்து அதில் பயணம் செய்பவர்களின் கவனத்தை திசை திருப்பி, வாகனங்களிலிருந்து அவர்களை கீழே இறங்கவைத்து, மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபடுகிறது என்றும் இந்த தகவலை உடனடியாக அனைவருக்கும் பகிருங்கள் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலானது. இது அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளை பீதிக்கு உள்ளாக்கியது. 

அந்த வீடியோ, போலீசாரின் கவனத்துக்குச் சென்ற நிலையில், விசாரணையில் இறங்கிய இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, குறிப்பிட்ட அந்த பகுதியில் மட்டுமல்ல, அந்த சாலையின் எந்த இடத்திலும் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தது. இதனையடுத்து, வாகன ஓட்டிகளை பீதிக்கு உள்ளாக்கியதோடு, காவல்துறையின் பெயரையும் கெடுக்கும் வகையில் போலி வீடியோவை வெளியிட்ட நபர் யார் என்று விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார். விசாரணையில் அந்த நபர் மதுரையைச் சேர்ந்த ராம்குமார் என்பது தெரியவந்தது. 

அவரை அழைத்து விசாரித்தபோது, சம்பவத்தன்று இவர் காரின் மீது விழுந்தது கல் அல்ல, செருப்பு என்பதும் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தூக்கி எறிந்த அந்த செருப்பு கார் மீது விழுந்ததும் தெரியவந்தது. அதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிவப்பு நிற குடத்தில் இருந்து தண்ணீரைக் கவிழ்த்த காட்சியை, அவர் கொள்ளையர்களுக்கு சிக்னல் கொடுப்பதாக சித்தரித்ததும் தெரியவந்தது. தனது காரில் இருந்த சிசிடிவி பதிவு காட்சியை வைத்து நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக மிகைப்படுத்தி தன் மனதில் தோன்றிய கற்பனையை உண்மை போல சித்தரித்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ராம்குமார். இதனையடுத்து தாம் செய்தது தவறுதான் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என போலீசார் அவரிடம் எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வீடியோ போலியானது என்பதை அவர் வாயாலேயே சொல்லவைத்து அதனையும் வீடியோ பதிவு செய்தனர். 

வெற்று விளம்பரத்துக்காகவும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் சமூக வலைதலங்களில் வெளியிடப்படும் இதுபோன்ற வீடியோக்களை ஆராயாமல் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தும் போலீசார், அதுபோன்ற வீடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments