திருடிய பொருட்களுடன் தூக்கம்.. போலீசில் சிக்கிய ஒரிஜினல் "கீரிப்புள்ள"..!

0 5600

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் மற்றும் வீடுகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட பிளம்பர் ஒருவன், வடிவேலு பாணியில் திருடிய பொருட்களோடு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீசில் சிக்கியுள்ளான்.

கன்னியாகுமரியில் சிசிடிவி காட்சிகளை பின் தொடர்ந்து வந்த போலீசார், திருடிய பொருட்களுடன் வீட்டில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த திருடனை கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கோயில் மற்றும் வீடுகளை குறிவைத்து தங்க நகைகள், குத்துவிளக்குகள், வெண்கலத்திலான கோயில் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்த புகார்கள் அதிகரிக்கவே, தனிப்படை அமைத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

சில தினங்களுக்கு முன் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோனதாகத் தகவல் வரவே, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் 4 பேர் கொண்ட கும்பல், நள்ளிரவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

வழிநெடுக உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துகொண்டே சென்றபோது, சடையால்புதூர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் திருட்டுக் கும்பல் நுழையும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. சத்தமில்லாமல் போலீசார் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பல்வேறு இடங்களில் திருடுபோன பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, நடுவே ஒரு நபர் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளான்.

அவனைத் தட்டி எழுப்பி, விசாரித்தபோது, வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த பிளம்பர் அனிஷ்ராஜன் என்பது தெரியவந்தது. அவனைக் கைது செய்து வெண்கலம், தங்கம், வெள்ளி என சுமார் 600 கிலோ அளவிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அனீஷ்ராஜனின் கூட்டாளிகள் 3 பேரைத் தேடி வருகின்றனர்.

இதே அனிஷ்ராஜன் கடந்த பிப்ரவரி மாதம் மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து பூட்டிய கோயில் மற்றும் வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதாகவும் திருடிய பொருட்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் அனிஷ்ராஜன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுவரை 24 இடங்களில் திருட்டை அரங்கேற்றியுள்ளதாகக் கூறும் அனிஷ்ராஜன், 25வது திருட்டை வெற்றிகரமாக அரங்கேற்றி, வெள்ளிவிழா கொண்டாடவிருந்த நேரத்தில் போலீசில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments