இயற்கை தன்னை அழைக்கும் போது முதல்வரின் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் போதும் - பேரவையில் உருக்கமாக பேசிய அமைச்சர் சேகர்பாபு

0 4749
இயற்கை தன்னை அழைக்கும் போது முதல்வரின் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் போதும் - பேரவையில் உருக்கமாக பேசிய அமைச்சர் சேகர்பாபு

ஓராண்டுக்குள் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்பன உள்ளிட்ட 112 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார். மேலும் இயற்கை இறுதியாக தன்னை அழைக்கும் போது பொதுவாழ்வில் அடைக்கலம் தேடி வந்த தனக்கு புதுவாழ்வு தந்த மு.க.ஸ்டாலின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தால் போதும் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.

சென்னை உட்பட தமிழகத்தில் பத்து இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ரூபாய் 150 கோடி செலவில் தொடங்கப்படும், ஆண்டு முழுவதும் அதிகளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்லும் பழநி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிகாணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது, மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழநி, திருவரங்கத்தை தொடர்ந்து, செப்டம்பர் 17-முதல் திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் அனைத்து தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூபாய் 125 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார். திமுக அரசு அமைந்த பிறகு, 641 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கபட்டுள்ளது என்றும் பேரவையில் அமைச்சர் கூறினார்.

 

 

பொதுவாழ்வில் அடைக்கலம் தேடி வந்த தனக்கு புதுவாழ்வு தந்தவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்ட சேகர்பாபு, முதலமைச்சரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன், இயற்கை தன்னை இறுதியாக அழைக்கும் போது உங்கள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வர வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிட்டார். ராமனுக்கு அனுமான் இருந்தது போல் உங்களுக்கு நான் இருப்பேன் என முதலமைச்சரை பார்த்து சேகர்பாபு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments