சிட் ஃபண்ட் "சீட்டிங்" தம்பதி ; பணத்தை கேட்ட கணவன்-மனைவியை எரித்துக் கொல்ல முயற்சி

0 3067
சிட் ஃபண்ட் "சீட்டிங்" தம்பதி ; பணத்தை கேட்ட கணவன்-மனைவியை எரித்துக் கொல்ல முயற்சி

தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவில், சீட்டு பணத்தை கேட்ட நபரை, அவரது மனைவி கண்முன்னே உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்ற கொடூர தம்பதியின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் கடைக்காரர் உடல் முழுவதும் தீப்பற்றி அலறித் துடித்து ஓடிய காட்சிகளும், கொலை முயற்சியில் பக்கத்து கடைக்காரர் சட்டையில் தீப்பற்றிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா டைலர் தெருவில் ராஜூ என்ற நபர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கணேஷ் மற்றும் காவியா தம்பதி நடத்தி வந்த அட்சயா சிட் ஃபண்ட் என்ற நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் சீட்டு கட்டி வந்த ராஜூ, தனது தேவைக்கு சீட்டுப் பணத்தை எடுத்துள்ளார்.

ஆனால் சீட்டுத் தொகையை தராமல் அட்சயா சிட் ஃபண்ட் இழுத்தடித்து வந்ததாகவும், இதனால் வெறுப்படைந்த ராஜூ, நேற்று முன்தினம் சிட் ஃபன்ட் அலுவலகத்திற்கு சென்று கணேஷ் மற்றும் காவியாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அலுவலகத்தின் ஷட்டரை இழுத்துப்பூட்ட ராஜூ முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை ராஜுவின் செல்ஃபோன் கடைக்கு வந்த, சிட் ஃபன்ட் தம்பதி கணேசும் காவியாவும், ராஜூவின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

உடல் முழுவதும் தீப்பற்றி கடைக்குள் இருந்து அலறித் துடித்து ராஜூ வெளியே ஓடிவந்துள்ளார். மனைவி செய்வதறியாது கதறித்துடித்தவாறு கணவர் பின்னே ஓடிவந்தார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்த 2 நபர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை ஊற்றியும், கோணிச் சாக்கை போட்டும் தீயை அணைத்தனர். மரண பயம் கண்ணில் தெரிய ராஜூ அழுதபடி நின்ற காட்சி, பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த சம்பவத்தில் பக்கத்து கடைக்காரர் ஒருவரின் சட்டையிலும் தீப்பற்றியுள்ளது. ராஜூவின் கடைக்குள் பற்றி எரிந்த தீயை, தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.பலத்த தீக்காயமடைந்த ராஜு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கொடூர தம்பதியை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments