தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை... ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

0 1974

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் ஏரி குளங்களில் நீர் பெருகியதுடன் ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கிருஷ்ணகிரியில் புதன் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுக் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததுடன் தாழ்வான பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. தேவ சமுத்திரம் ஏரி அருகே உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. கொப்பக்கரை ஊராட்சியில் உள்ள கொலுசுமடுவு என்னுமிடத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே உள்ள பாறைகளில் மீது ஆற்று வெள்ளம் அருவிபோல் பாய்கிறது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகச் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேலத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் சேலம் பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், நாராயண நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நாராயண நகரில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

சேர்வராயன் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அடிவாரத்தில் உள்ள புது ஏரி இன்று நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments