பயங்கரவாதச் செயலுக்கு ஆப்கன் இடமளிக்கக் கூடாது ;இந்தியா அறிவுறுத்தல்.!

0 3371
பயங்கரவாதச் செயலுக்கு ஆப்கன் இடமளிக்கக் கூடாது ;இந்தியா அறிவுறுத்தல்.!

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் ஆப்கானிஸ்தானில் இடமளித்துவிடக் கூடாது என இந்தியா தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலையத்தில் இருந்து வெள்ளி முதல் மீண்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ஆப்கானிஸ்தானில் எத்தகைய அரசு அமையப் போகிறது என்பது பற்றித் தமக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். காபூல் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த பின்னரே ஆப்கானில் உள்ள இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவது குறித்துக் கூற முடியும் எனத் தெரிவித்தார்.

தாலிபான்களுடன் மேலும் பேச்சு நடக்குமா? நடக்காதா என்பது இப்போது ஒரு பொருட்டல்ல என்றும், ஆப்கான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயலுக்கு இடமளிக்கக் கூடாது என்பதே நமது நோக்கம் எனத் தெரிவித்தார்.

ஆப்கனில் உள்ள அமெரிக்கர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டுவரும் வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் நலன் காக்கத் தாலிபான்களுடன் தொடர்ந்து பேச்சு நடைபெறும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி விக்டோரியா நியூலேண்ட் தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையச் சீரமைப்புப் பணியில் கத்தார் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் என்றும், பன்னாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கக் கூடுதல் காலம் ஆகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் உணவுப்பொருட்கள் கையிருப்பு ஒரு மாதத்துக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும், அதனால் உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் ஐநா மனிதநேய நடவடிக்கைகளுக்கான அதிகாரி ரமீஸ் அலக்பாரோவ் கேட்டுக்கொண்டுள்ளார்.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments