அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார்

0 10345

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ். மனைவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பெருங்குடியிலுள்ள ஜெம் மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி, உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில், அதிகாலை 5 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக இதயநோய் நிபுணர்கள் மூலம் விஜயலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காலை 6.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

ஜெம் மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பி.எஸ். மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, மனைவியை இழந்த துயரம் தாளாமல் முதலமைச்சரிடம் ஓ.பி.எஸ். கண்கலங்கிய நிலையில், முதலமைச்சர் ஓபிஎஸ் கைகளை பிடித்து ஆறுதல்படுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பெருங்குடி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பி.எசுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோரும் ஓ.பி.எஸ். மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்திறங்கிய சசிகலா, ஓ.பி.எஸ்.சுக்கு கண்கலங்கி ஆறுதல் கூறினார். சசிகலா ஆறுதல் கூறிய போது ஓ.பி.எஸ்.சும் கண்கலங்கினார். அப்போது சசிகலா ஓ.பி.எஸ்.சின் கைகளைப் பிடித்து தைரியப்படுத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் ஜி.கே.மணி, நடிகர் பிரபு ஆகியோர் ஓ.பி.எஸ்.ஐ. சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து, உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்ட ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி உடல் தேனி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இதற்கிடையே, தேனி மாவட்டம் பெரியகுளம் கொண்டுவரப்பட்ட விஜயலட்சுமியின் உடல், தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலிக்குப் பின் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments