சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சாலைமறியல் - கைது..!

0 6298

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், வாலாஜா சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது, இந்த சட்ட மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச முற்பட்டார். அதற்கு அனுமதி மறுத்துவிட்ட சபாநாயகர், மசோதா விவாதத்திற்கு வரும் போது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார். இதனையடுத்து, அறிமுக நிலையிலேயே சட்ட முன்வடிவை எதிர்ப்பதாக கூறி பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வேனில் ஏற்றிச் சென்று திருவல்லிக்கேணியிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சிலையின் கீழ் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் கைது செய்யப்பட்டார். 

இதனிடையே, சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 63 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி ஒன்றாக கூடுதல், அரசாங்க உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments