பெங்களூரில் நள்ளிரவில் கோர விபத்து… திமுக எம்.எல்.ஏ.வின் மகன் உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு

0 12924

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நள்ளிரவில் அதிவேகத்தில் சென்ற ஆடி கார் கட்டுப்பாட்டை இழந்து காம்பவுண்டு சுவரில் மோதிய கோர விபத்தில் ஓசூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மகன் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் தொகுதி எம்எல்ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர். 30 வயதான கருணாசாகர், நேற்று தோழிகள் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஆடி Q3 காரில் ஓசூர் திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவில், வாகன போக்குவரத்து குறைவாக இருந்த நிலையில், கருணாசாகர் காரை அதிவேகமாக இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோரமங்களா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் ஏறியது. நடைபாதையில் இருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து தறிகெட்டு ஓடிய கார், அங்குள்ள வங்கியின் சுற்றுச் சுவரில் பயங்கரமாக மோதியது.

காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த ஒசூர் தொகுதி திமுக எம்எல்ஏ மகன் கருணாசாகர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவையும், மற்றொருவர் ஹரியானாவையும் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

காரை ஓட்டி வந்தது எம்.எல்.ஏ. மகன் கருணாசாகர் தான் என தெரியவந்துள்ள நிலையில், அவர் மதுபோதையில் காரை ஓட்டினாரா என விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments