பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்

0 3021

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 மணியுடன் வகுப்புகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தயக்கமின்றி பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் எனவும், தமிழகத்தில் 95சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், ஒரு வேளை அவர்கள் முகக்கவசம் அணிந்துவரவில்லை என்றாலோ, முகக்கவசம் கிழிந்துவிட்டாலோ அவர்களுக்கு மாற்று முகக்கவசம் வழங்கும் வகையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் முகக்கவசம் இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் என்ற அடிப்படையில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, அனைத்துப் பள்ளிகளும் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள், ஒரு பெஞ்சில் 2 மாணவர்கள் மட்டுமே உட்கார அனுமதிக்கபடுவர் என்றும் கூறினார். 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வகுப்பறைகள் காலியாக இருக்கும் என்பதால், அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், போதுமான வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளில் மட்டுமே சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் அடிப்படையான பாடங்கள் கற்றுத்தரப்படும் என்று கூறிய அமைச்சர், பல நாட்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு ஆசிரியர்களும் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments