சிறுத்தை பட பாணியில் கொள்ளை.! பொருட்களை வைக்க வாடகை வீடு.!

0 2376

சென்னை கோடம்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் ஒரே இரவில் 25- க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில்  2பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து  2 இரு சக்கர வாகனம்,  10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சென்னை கோடம்பாக்கம் புலியூர் பகுதியில் சூப்பர் மார்கெட், மளிகை மற்றும் அரிசி கடை என தொடர்ச்சியாக 8 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடைகளில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கடந்த 24-ஆம் தேதி கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தொப்பி அணிந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், சிசிடிவியில் பதிவான கொள்ளையனின் முகத்தை வைத்து பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது பூட்டை உடைத்து திருடும் பிரபல கொள்ளையன் இட்டா விஜய் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இட்டா விஜய் வழக்கமாக பதுங்கி இருக்கும் அத்திப்பட்டு பகுதியில் போலீசார் தேடிய போது அவன் சிக்கவில்லை.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க கோடம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து அவர்கள் சென்ற பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களைஆய்வு செய்தனர். அப்போது இதே கொள்ளையர்கள் விருகம்பாக்கம் பகுதியிலும் அதே நாளில் திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மகள் நடத்தும் சூப்பர் மார்க்கெட் உட்பட 3 கடைகளில் தங்களின் கைவரிசையைக் காட்டிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளையர்கள் சென்ற இடத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் பின் தொடர முடியாமல் திணறிய போலீசார் அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து வலைவீசி தேடினர். அப்போது பட்டினப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு அந்த கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கோடம்பாக்கம் வரதராஜபேட்டை ஆற்காடு சாலை சந்திப்பு பகுதியில் இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் அதன் அருகே கண்காணித்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று விடியற்காலை கோடம்பாக்கத்தில் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை இரு கொள்ளையர்களும் எடுக்க வந்தபோது மறைந்திருந்த போலீசார், இட்டா என அழைக்க, திரும்பி பார்த்துவிட்டு ஓட்டம் பிடித்த இட்டா விஜய் மற்றும் அவனது கூட்டாளியான அத்திப்பட்டை சேர்ந்த பிராவோ என்ற சூரிய பிரகாஷை துரத்தி சென்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 24ந்தேதி ஒரே நாள் இரவில் 25க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து பருப்பு வகைகள், சாக்லேட்டுகள் என கைக்கு கிடைத்த அனைத்தையும் திருடியதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பொருட்களை வைப்பதற்காக போரூரில் வாடகைக்கு வீடு எடுத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்து எல்.இ.டி டிவி, லேப்டாப், 10 செல்போன்கள், சாக்லேட், எண்ணெய், வெள்ளி என சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments