தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு

0 8911
தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ள அரசு, திட்டமிட்டபடி செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.ஞாயிற்று கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் என பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தால் எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், நடைமுறையில் இருக்கும் கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள், செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலை கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தனிநபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி உண்டு என்றும் தனி நபராகச் சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை, நாகை வேளாங்கண்ணியில் மரியன்னையின் பிறந்த நாள் விழாவின் போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள், பணி புரிவோர்களுக்கான தனியார் விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேரளாவில் இருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று பெற்றிருப்பதை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments