மயக்க ஊசி செலுத்தி, கடத்திச் சென்று ஜிபே மூலம் ரூ.1 லட்சம் கொள்ளை? டிஜிபி அலுவலக உளவுப்பிரிவு காவலர் புகார்

0 2538

காரில் வைத்து மயக்க ஊசி செலுத்தி, கடத்திச் சென்று, தன்னிடம் ஜிபே மூலமாக ஒரு லட்ச ரூபாயை கொள்ளையடிக்கப்பட்டதாக டிஜிபி அலுவலக உளவுப்பிரிவு தலைமைக் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் உண்மைத்தன்மை  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் உளவுப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் 45 வயதான ரவி. நேற்று முன்தினம், தலைமைச் செயலக பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு சூளைமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்த ரவி, மதியத்திற்கு மேல் டிஜிபி அலுவலகம் புறப்பட்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த, நீண்ட நாள் தெரிந்த இளைஞரான அஜய்  விக்கி என்பவர், தான் அடையாறு செல்வதாகவும், டிஜிபி அலுவலகத்தில்  இறக்கிவிடுவதாகவும் கூறியதால் அவரது காரில் ஏறிச் சென்றதாக புகாரில் ரவி  கூறியுள்ளார்.

காருக்குள் ஏற்கனவே அஜயின் இரண்டு நண்பர்களும் இருந்ததாகவும், சிறிது நேரத்தில் முதுகுப் பகுதியில் ஏதோ ஊசியை வைத்து குத்தியது போல இருந்ததாகவும், பிறகு நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்றும் காவலர் ரவி புகாரில் தெரிவித்துள்ளார். சுமார் 18 மணி நேரம் கழித்து நேற்று கண்விழித்து பார்த்தபோது ஈசிஆர் பகுதியில் சேற்று நீரில் கிடந்ததை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

அங்கிருந்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ள உளவுப் பிரிவு காவலர் ரவி, தன்னை காரில் கடத்தி, தனது செல்போனில் இருந்து ஜிபே மூலம் ஒரு லட்சம் பணத்தைத் திருடியிருப்பதாகவும் புகாரில் கூறியுள்ளார். ஆனால் பாஸ்வேர்டு, பாஸ்கோடு  இல்லாமல் ஜிபே-யில் பணம் திருடப்பட்டது எப்படி? எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றது? என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உளவுப் பிரிவு காவலரின் இந்தப் புகார் குறித்து உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலரின் செல்போன் எண்ணை வைத்து, சிக்னல் அடிப்படையில் சம்பவ நாளில் எங்கெல்லாம் சென்றிருக்கலாம் என ஆராய்ந்ததில்,  நேற்று முன்தினம் இரவு முழுவதும் சோழிங்கநல்லூர் அடுத்து உள்ள ரிசார்ட் ஒன்றில் செல்போன் இருந்தது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது? ஒரு லட்ச ரூபாய் எந்த வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது? கடத்தியதாகக் கூறப்படும் அஜய் அவரது நண்பர் சதீஷ் உள்ளிட்ட மூன்று பேர் எங்கே என போலீசார்  விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments