அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து... 6 பேர் உயிரிழந்த பரிதாபம்

0 3245

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில் 12 வயது சிறுவன், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் இமானுவேல், தனது தம்பி எபினேசர் பெஞ்சமினுடன் தாம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணையும் அந்த பெண்ணின் குடும்பத்தினரையும் உதகையில் அவர் பெயரில் இருக்கும் நிலத்தை காண்பிப்பதற்காக காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிலத்தை பார்த்துவிட்டு நேற்றிரவு அனைவரும் எக்ஸ்.யூ.வி. 500 காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த 12 வயது சிறுவன், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். அரசு பேருந்து ஓட்டுநர், பயணிகள் என 6 பேர் காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காரும், பேருந்தும் சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், ஜே.சி.பி., இழுவை இயந்திரங்கள் மூலம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் இருந்து கார் தனியாக பிரிக்கப்பட்டு காரில் இருந்த சடலங்கள் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து தியாகதுருகம் நகரை இணைக்கும் பிரிவுச் சாலை ஒன்று உள்ளது. கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அந்த பிரிவு சாலையில் இருந்து வந்த இருசக்கர வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் ஏற முயன்றுள்ளது. அந்த பைக் மீது மோதிவிடக் கூடாது என எண்ணி, காரை ஓட்டி வந்த இமானுவேல் வலதுபுறமாக காரை திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் லேசாக உரசி மறுமார்க்கத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments