ஏற்கெனவே திருமணமான பெண்ணை, பெண் கேட்க சென்ற நாடோடி நண்பர்கள்... பொய் சொன்ன நண்பனால் போலீசில் சிக்கிய கூத்து

0 5357

சென்னையில் தனது டிக்டாக் காதலிக்கு திருமணமான தகவலை மறைத்து, தனது நண்பர்களை அவரது வீட்டிற்கு அனுப்பி பெண் கேட்டு டார்ச்சர் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த பிரபல நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர், கடந்த 6-ஆம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வாட்சப் எண்ணுக்கு, அவரது மனைவியின் ஆபாச வீடியோ ஒன்றை மர்ம நபர் ஒருவர் அனுப்பி, மனைவியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என மிரட்டியதாகவும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் மர்ம நபர் மிரட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணிடம் போலிசார் விசாரித்தபோது, வீட்டின் அருகில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வசந்த் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வசந்த் உடன் சேர்ந்து பல்வேறு டிக்டாக் வீடியோக்களும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி பிரச்சனையை ஏற்படுத்தி, டிக் டாக் காதலியை வசந்த் தன்னோடு சேர்ந்து வாழும்படி தொந்தரவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், எப்படியாவது கணவரிடம் இருந்து டிக் டாக் காதலியை பிரித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டமிட்ட வசந்த், தன்னுடைய அப்பாவி நண்பர்கள் இருவரை அதற்கு பயன்படுத்தியுள்ளான். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எனவும், தனது நண்பர்களிடம் வசந்த் புலம்பியுள்ளான். இதை கேட்டு அவரது காதலுக்கு உதவ முன்வந்த "நாடோடிகள்" நண்பர்களிடம் பெண்ணுக்கு திருமணமானதை மறைத்து பெண் கேட்க வசந்த் அனுப்பியுள்ளான்.

சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தில் வசந்தின் நண்பர்கள் பெண் கேட்க சென்ற போதுதான், அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அவரது கணவரிடமே பெண் கேட்கிறோம் என்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணின் கணவர் ஆத்திரமடைந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் வசந்தை ஏற்கனவே தேடி வந்த அண்ணா நகர் போலீசார், அந்த பெண்ணை திருமணம் செய்துகொடுக்க, பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்துவிட்டதாக நண்பர்களை விட்டே பேசவைத்து வசந்தை வரவழைத்துள்ளனர்.

அதனை நம்பி வந்த வசந்தை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறியாமல் நண்பனுக்காக பெண் கேட்க வந்து சிக்கிய நாடோடி நண்பர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments