மதுரை மேம்பாலம் சரிந்து விபத்து..! ஒப்பந்த நிறுவனத்தின் மெத்தனமே காரணம்..! 3 பேர் மீது வழக்கு..!

0 2599
மதுரை மேம்பாலம் சரிந்து விபத்து..! ஒப்பந்த நிறுவனத்தின் மெத்தனமே காரணம்..! 3 பேர் மீது வழக்கு..!

மதுரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, முழுக்க, முழுக்க ஒப்பந்த நிறுவனத்தின் மெத்தனப்போக்கே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மதுரை நத்தம் சாலையில், பாண்டியன் ஓட்டல் சந்திப்பு தொடங்கி செட்டிக்குளம் வரை 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 268 ராட்சத தூண்களுடன் கூடிய பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று, இரண்டு தூண்களை இணைக்கும் வகையில் கிடைமட்ட கான்கிரீட் மேல் தளம் பொருத்தப்பட்டு வந்தது. அப்போது, திடீரென அந்த மேல்தளம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாள்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பால பணியின் ஒப்பந்ததாரரான JMC projects நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், பொறியாளர் ஜதேந்தர் வர்மா மற்றும் ஹைட்ராலிக் மெஷின்களை ஒப்பந்தத்திற்கு வழங்கியிருக்கும் ஷெல் மேக் நிறுவன பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஷெல் மேக் நிறுவனத்தை சேர்ந்த பாஸ்கரனை காவல்நிலையத்தில் வைத்து தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையால் தான் விபத்து நிகழ்ந்ததாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். விபத்து குறித்து விசாரணை நடத்த திருச்சி NIT பேராசிரியர் பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குழு விசாரணை நடத்தி குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், அதுவரை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றார்.

120 டன் எடை கொண்ட, கிடைமட்ட மேல் தளத்தை 200 டன் கொண்ட ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தூக்கி கட்டமைக்க வேண்டும். ஆனால் 120 டன் கொண்ட ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் கட்டமைத்தது தெரியவந்துள்ளதாக கூறிய அமைச்சர், ஹைட்ராலிக் இயந்திர பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தப்படும் எனவும், பாதுகாப்பு விதிமுறை மீறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments