சுருக்குமடி வலை தொடர்பாகப் புதுச்சேரி மீனவர்கள் கடலில் மோதல்

0 2012
சுருக்குமடி வலை தொடர்பாகப் புதுச்சேரி மீனவர்கள் கடலில் மோதல்

புதுச்சேரி நல்லவாடு மீனவர்கள்  சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிப்பதாக வீராம்பட்டினம் மீனவர்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்துப் பத்துக்கு மேற்பட்ட படகுகளில் விரைந்து சென்ற வீராம்பட்டினம் மீனவர்கள், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என நல்லவாடு மீனவர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் இரு ஊர்களின் மீனவர்களும் படகுகளைக் கொண்டு படகுகள் மீது மோதியும், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறிக் கற்களை வீசியெறிந்தும் தாக்கினர்.

இரு ஊர்களின் மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கத்தி, அரிவாள், கம்பு ஆகியவற்றுடன் கடலோரத்தில் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் துப்பாக்கி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் ஆகியவற்றுடன் கடற்கரைக்கு வந்து மீனவர்களிடம் பேச்சு நடத்தினர். 

கலவரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், வம்பாகீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. முகத்துவாரம் அருகே இரண்டு மீனவ கிராம மக்களும் கத்தி, அரிவாள், சூளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரு கரையோரம் நின்றிருந்தனர்.

மோதலை தடுக்கும் வகையில் இரு கிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments