முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரஹா ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

0 2436
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரஹா ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, விக்ரஹா என்ற அதிநவீன ரோந்து கப்பலை இந்திய கடலோர காவல்படையின் பயன்பாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

இந்திய கடலோர காவல் படைக்காக, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், விக்ரஹா ரோந்து கப்பல்களை எல் அண்டு டி நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. விக்ரஹா வரிசையில் ஏழாவதாக தயாரிக்கப்பட்டுள்ள ரோந்து கப்பலை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், விக்ரஹா ரோந்து கப்பல் கடலோர காவல் படையின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், சர்வதேச அளவிலான கடல் வர்த்தகத்தில் இந்தியப் பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கும் பின்னணியில், கடலோர காவல்படையின் பங்கை சுட்டிக்காட்டினார். இந்திய பெருங்கடல் பகுதியில் உஷார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், மாறி வரும் உலக சூழலில் பாதுகாப்பு படையினருக்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு துறை அமைச்சகம், கடலோரக் காவல் படை, எல் அண்டு டி இடையேயான பயணம் விக்ரம் என்பதில் இருந்து தொடங்கி, விஜய், வீர், வராஹா, வரத், வஜ்ரா ரோந்து கப்பல்கள் வழியாக, விக்ரஹா என்ற இலக்கை எட்டியிருப்பதாக அவர் கூறினார். 98 மீட்டர் நீளம் கொண்ட விக்ரஹா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செயல்படும். அதில் 11 அதிகாரிகளும், 110 மாலுமிகளும் இருப்பார்கள். இந்த ரோந்து கப்பலில் அதிநவீன ரேடார்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளன.

தேடல், மீட்பு பணிகளுக்காக எந்நேரமும், இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர், 4 அதிவேக படகுகள் தயார்நிலையில் இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன், வானூர்திகளையும் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஃபோபர்ஸ் துப்பாக்கி, விக்ரஹாவில் உள்ளது. கப்பல்களில் இருந்து கசியும் எண்ணெய் கசடுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. விக்ரஹா ரோந்து கப்பல் கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிரிவு வசம் இருக்கும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments