கோவையில் விவசாயியை தாக்கிய வழக்கு: விஏஓ மற்றும் உதவியாளர் கைது

0 19089

கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து விவசாயியை தாக்கிவிட்டு அவரது காலில் விழுந்து வன்கொடுமை புகாரில் ஜாதிப்பிரச்சனையை ஏற்படுத்த முயன்ற விவகாரத்தில், கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் வி.ஏ.ஓ. அலுவலக உதவியாளர் முத்துசாமி, விஏஓ கலைச் செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7ஆம் தேதி ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில், விவசாயி கோபால்சாமி என்பவர் காலில் விழுந்து, கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. பட்டியல் இனத்தை சேர்ந்த முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் விவசாயி கோபால்சாமி மீது அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் நிலப்பிரச்சனை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி கொண்டிருந்த விவசாயி கோபால்சாமியை, கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி திடீரென கன்னத்தில் பலமாக அறைந்து கீழே தள்ளி, தகாத வார்த்தைகளில் திட்டியது, 2வதாக வெளியான வீடியோவில் அம்பலமானது. இந்த உண்மையை மறைப்பதற்கே முத்துசாமி காலில் விழுந்து நாடகமாடியதோடு, வன்கொடுமை என பொய்புகார் கூறியதும் உறுதியானது.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், வி.ஏ.ஓ., கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம், கடையடைப்பு என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, முத்துசாமி மீது தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்துதல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழும், பொய்யான தகவல் கொடுத்ததாக வி.ஏ.ஓ., கலைச்செல்வி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இருவரையும் அன்னூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments