அடுத்து அடுத்து நிகழ்ந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியான சோகம்..

0 3309

சேலம் - தருமபுரி மாவட்ட எல்லை அருகே நள்ளிரவில் கண்ட்டெய்னர் லாரி மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மீது ஏறிய கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திங்கட்கிழமை நள்ளிரவு சேலத்திலிருந்து தருமபுரி நோக்கிச் சென்ற கண்ட்டெய்னர் லாரி ஒன்று, தொப்பூர் பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

அந்த நேரம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்மலை என்பவர், தனது மனைவி சகுந்தலா மற்றும் 2 மகள்களுடன் ஓசூர் நோக்கி மாருதி வேகனார் காரில் சென்றுகொண்டிருந்தார்.

சாலை நடுவே கிடந்த முதியவரின் சடலத்தை திடீரென கவனித்த பொன்மலை, பதற்றத்தில் காரை நிறுத்த முயன்றதாகவும் அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சடலத்தின் மீது ஏறி இறங்கி, சாலையோரம் நின்றிருந்த கண்ட்டெய்னர் லாரி மீது மோதி, பின் அருகிலிருந்த சாலை தடுப்பிலும் மோதி தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது.

கார் தீப்பிடித்த உடனேயே அனைவரும் கீழே இறங்கி விட்ட நிலையில், காயம் காரணமாக பொன்மலை, சகுந்தலா, அவரது மகள்களில் ஒருவரான நித்தியா ஆகியோர் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments