ஷோகேஸாக பென்ஸ் கார்.. பண்ணை வீடுகளும், பளபள கார்களும்..! மோசடி மன்னன் சுகாஷின் பின்னணி

0 3437

மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர், ஈ.சி.ஆரிலுள்ள பண்ணை வீட்டில் பழமையான பென்ஸ் கார் ஒன்றை வீட்டிற்குள் காட்சி பொருளாக வைத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த காரை வெளியில் எடுக்க முடியாததால் வீட்டோடு சேர்த்து அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

பல்வேறு மோசடி வழக்கில் கைதான பெங்களூருவைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகரின் ஈ.சி.ஆர். பண்ணை வீட்டில் இருந்து அண்மையில் பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், ஃபெராரி, லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்கள் உட்பட சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சொகுசு கேரவனும் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்தனை சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ள சுகாஷ் சந்திரசேகர் யார் என்பதும்? எப்படி இத்தனை கார்களை வாங்கி குவித்துள்ளான் என்பதும் தான் பலதரப்பினருக்கும் வியப்பாக இருந்தது. பிஞ்சுலேயே பழுத்தது என்ற பழமொழிக்கு ஏற்ப தனது 17 வயதிலேயே மோசடியை தொடங்கி கைதானவன் சுகாஷ் சந்திரசேகர்.

கர்நாடக மாநிலத்தில் மிடில் கிளாஸ் குடும்ப பின்னணியைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர், 10-ம் படித்துக் கொண்டிருக்கும் போது படிப்பை பாதியில் விட்டுவிட்டு மோசடியில் இறங்கியுள்ளான். அப்போதைய கர்நாடக முதலமைச்சர் மகனின் நண்பர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சுகாஷ், முதியவரிடம் நிலத்திற்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி 1.14 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டான்.

தனி ஒருவன் பட அரவிந்த் சாமி கதாபாத்திரம் போல், நாடி, நரம்புகளில் மோசடி ஊறிப்போய் வளரும் போதே கிரிமினலாக வளர்ந்தவன் சுகாஷ் சந்திரசேகர் எனக் கூறப்படுகிறது.

அதன் பிறகு 2013-ம் ஆண்டு வங்கி மோசடியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்படும் போது தான் சுகாஷ் எத்தனை விதமான மோசடியில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரியவந்தது. அப்போதய சோதனையின் போதும் 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடி செய்யும் பணத்தில் விதவிதமான சொகுசு கார்களை வாங்கி குவிப்பதும், தான் செய்து கொடுக்கும் இடைத்தரகர் வேலைக்கு அவர்களிடம் உள்ள விலையுர்ந்த சொகுசு கார்களை பரிசாக வாங்கி கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளான் என்கின்றனர் சுகாஷின் முந்தைய வழக்குகளை விசாரித்த அதிகாரிகள்.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு உட்பட 21 வழக்குகளில் இதுவரை கைதாகியுள்ள சுகாஷ், பல கோடி மதிப்புடைய சொகுசு கார்களும், பண்ணை வீடுகளையும் வாங்கி வைத்துள்ளான். ஈசிஆர் கானத்தூர் பண்ணை வீட்டிற்குள் காட்சி பொருளாக பென்ஸ் கார் ஒன்றையும் சுகாஷ் நிறுத்தி வைத்துள்ளான். பென்ஸ் ரக கார்களில் பழைய ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றான Mercedes-Benz 300 SLR 722 என்ற காரை வீட்டிற்குள் நிறுத்தி வைத்துள்ளான்.

மூன்று கோடி மதிப்புடைய பென்ஸ் காரை வெறும் காட்சிப் பொருளாக வைக்கும் அளவிற்கு சுகாஷ் சந்திரசேகருக்கு சொகுசு கார்கள் மீது காதல் என கூறப்படுகிறது. வீட்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரைச் சுற்றிலும் கட்டிட வடிவமைப்பு பணிகளை செய்துள்ளதால் அந்த காரை அதிகாரிகளால் வெளியில் எடுக்க முடியவில்லை. மேலும், உலகத்தில் உள்ள அனைத்து வகையான சொகுசு கார்களை வீட்டைச் சுற்றி நிறுத்தி மின்சார வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளான் சுகாஷ் சந்திர சேகர்.

200 கோடி மோசடி என சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் உள்ள சுகாஷை மீண்டும் கைது செய்ய திட்டமிட்டுள்ள அமலாத்துறை பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களையும், பண்ணை வீட்டையும் முடக்க முடிவு செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments