அப்பாவி மூதாட்டிகளை ஏமாற்றிய "அடப்பாவி" : "நூதன முறை" திருடனுக்கு வலை

0 2256

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் கொரோனா நிவாரண நிதி வந்துள்ளதாகக் கூறி, இரண்டு மூதாட்டிகளை ஏமாற்றி நூதன முறையில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர். 

கோபிச்செட்டிப்பாளையம் வேலுமணி நகரைச் சேர்ந்த சுந்தரி என்ற மூதாட்டி, கணவரை இழந்து, அரசு வழங்கும் உதவித் தொகையை வைத்து தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் கமலா என்ற மூதாட்டி வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இவரும் கணவரை இழந்து, பக்கத்திலுள்ள ஆலை ஒன்றில் கூலி வேலைக்குச் சென்றவாறு தனியாகத்தான் வசித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள கடை ஒன்றில் பால் வாங்கச் சென்ற கமலா பாட்டியை வழிமறித்த டிப்டாப் ஆசாமி ஒருவன், கொரோனா நிவாரண நிதி வந்திருக்கிறது என்றும் உங்களைப் புகைப்படம் எடுத்து அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான். வீட்டிற்குச் சென்று புகைப்படம் எடுக்கலாம் வாருங்கள் என மூதாட்டியை தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளான் மர்ம ஆசாமி. வீட்டிலிருந்த சுந்தரி பாட்டியிடம் விஷயத்தைக் கூறிவிட்டு கமலா பாட்டி பின் பக்கம் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சுந்தரி பாட்டியைப் பார்த்த மர்ம ஆசாமி, கொரோனா நிவாரண நிதி 18 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது என்றும் அதற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் அவரிடமும் கூறியுள்ளான். கமலா பாட்டியோடு வந்ததால் அவருக்குத் தெரிந்தவர் என எண்ணி அவனை நம்பிய சுந்தரி பாட்டியிடம், நகைகள் அணிந்திருந்தால் கொரோனா நிவாரண நிதி கொடுக்க மாட்டார்கள் என்றும் எனவே நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் புகைப்படம் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளான் மர்ம ஆசாமி.

அவன் கூறியதை நம்பி, தான் அணிந்திருந்த 5 சவரன் நகைகளைக் கழற்றி படுக்கையறைக்குள் இருந்த தலையணைக்கடியில் வைத்த சுந்தரி பாட்டி, மர்ம ஆசாமிக்கு காபி தயார் செய்வதற்காக சமையலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, அவர் சமையலறைக்குள் சென்ற இடைவெளியில் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளான்.

மூதாட்டிகள் இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டம்விட்டு, திட்டம்போட்டு இந்தத் திருட்டை மர்ம ஆசாமி அரங்கேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments