ஃபெராரி முதல் கேரவன் வரை பண்ணை வீட்டில் சிக்கிய "பளபள" கார்கள்

0 4225
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தரகர் சுகாஷ் சந்திரசேகரின் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.82 லட்சம் பறிமுதல்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இதுவரை 21 வழக்குகளில் சுகாஷ் சந்திரசேகர் கைதாகியுள்ளான். குறிப்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் போலி ஆவணங்கள் கொடுத்து 20கோடி ரூபாய் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்ததாக சுகாஷ் சந்திரசேகரும், அவனது காதலி நடிகை லீனா மரியம்பாலும் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு பிறகு, கடந்த 2018-ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி. தினகரனுக்கு சாதகமாக மீட்டுத் தருவதாக கூறி 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட புகாரிலும் சுகாஷ் சந்திரேகர் கைது செய்யப்பட்டான்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரசேகர், அவ்வப்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில், அந்த காலக்கட்டத்திலும் 200கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லியிலுள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு வழக்குப்பதிந்தனர்.

அத்தோடு, சட்டவிரோத பணபரிமாற்றம் என்ற சட்டப்பிரிவில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து சுகாஷ் சந்திரசேகர் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்டது. 

இந்த நிலையில், சென்னை ஈ.சி.ஆர். கானத்தூர் அருகே உள்ள பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், ஃபெராரி, லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்கள் உட்பட சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சொகுசு கேரவனும் சிக்கியுள்ளன.

அத்துடன் கணக்கில் வராத பணம் 82 லட்ச ரூபாய், 2 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறும் அமலாக்கத்துறையினர், அந்த வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர். 

அந்த பண்ணை வீட்டைச் சுற்றிலும் இருபது அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து, யாரும் உள்ளே செல்ல முடியாதபடி மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது திகார் சிறையில் உள்ள சுகாஷ் சந்திரசேகர் ஜாமீனில் வரும்போதெல்லாம் இந்த பண்ணை வீட்டில் தான் தங்கியிருந்தார் என்றும், மோசடி தொடர்பாக பல முக்கியமான நபர்களை இங்கு வைத்து தான் சந்தித்திருக்கிறார் என்றும் கூறப்படும் நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பறி அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி வருகிறது.

சுகாஷ் சந்திரசேகர் தொடர்புடைய சென்னையிலுள்ள மேலும் மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை முடிவில் சுகாஷ் சந்திரசேகர் பயன்படுத்திய லேப்டாப், 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வழக்கு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments