கொடுக்காத பணத்துக்கு "சில்லறை".. "கண்கட்டி வித்தை" காட்டும் திருட்டு கும்பல்..!

0 5744

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள துணிக்கடை ஒன்றில், கொடுக்காத 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வாங்கிச் சென்ற திருட்டுக் கும்பலின் கண்கட்டும் வித்தை தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

அருப்புக்கோட்டை பெரியகடை பஜாரில் இயங்கி வரும் தாரணி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் துணி வாங்குவது போல வந்துள்ளனர்.

ஆண்கள் இருவரும் பெயரளவுக்கு ஆளுக்கொரு ஆடைகளை வாங்கியுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவன் கடை ஊழியரிடம் 500 ரூபாயைக் கொடுத்து சில்லரை வாங்குகிறான். அவன் சில்லறையை வாங்கும் நேரம் பார்த்து அவனோடு வந்த மற்றொரு நபர், 500 ரூபாயை கடை ஊழியரிடம் நீட்டுகிறான். அந்த நோட்டை வாங்குவதற்குள் ஏற்கனவே சில்லறையை வாங்கிய நபர், அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டை அவனாகவே லேசாகக் கிழித்துவிட்டு, கடைப்பெண்ணிடம் கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்புகிறான்.

இந்த இடைவெளியில் 500 ரூபாயைக் கொடுப்பது போல் பாவனை செய்த மற்றொரு நபர், யாரும் கவனிக்காத வகையில் அந்த 500 ரூபாயை தங்களோடு வந்த பெண்ணிடம் கொடுத்துவிடுகிறான். அந்தப் பெண்ணும் நோட்டை வாங்கி தனது ஆடைக்குள் மறைத்துக் கொண்டு நழுவுகிறார். பின்னர் கொடுக்காத அந்த 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறையை கேட்டு வாங்கிக் கொண்டு 3 பேரும் வெளியேறுகின்றனர். 

இந்தப் பணப் பரிமாற்றத்தின் போது ஏதோ ஒரு தவறு நடந்திருப்பதாக நீண்ட நேரமாக குழப்பத்தில் இருந்த கடை ஊழியர், சந்தேகமடைந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் வாங்காத 500 ரூபாய்க்கு தான் சில்லறை வழங்கியிருப்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. இதே பாணியிலான சில்லறை மோசடி இரு தினங்களுக்கு முன் கரூரிலும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments