’’எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன்’’... வாழ்த்திப் பேசிய முதலமைச்சர், கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்

0 4945

பேரவையில் அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற பொன்விழா நாயகர் என அவருக்கு புகழாரம் சூட்டினார். முதலமைச்சர் வாழ்த்திப் பேசும்போதும், தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தபோதும் உணர்ச்சிப்பெருக்கில் துரைமுருகன் கண் கலங்கினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதத்தை முன்னிட்டு, அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். நூற்றாண்டு பெருமைமிக்க அவையில், 50 ஆண்டுகாலம் உறுப்பினராக இருக்கும் துரைமுருகன், கட்சிக்கும், ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் என குறிப்பிட்டார்.

பொன்னைப் போல எப்போதும் மின்னும் பொன் விழா நாயகரான துரைமுருகன், எப்போதும் புன்னகையுடன் இருப்பவர் என முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் பாராட்டிப் பேசியபோது, துரைமுருகன் கண் கலங்கினார்.

பாராட்டு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் துரைமுருகன் எனக் குறிப்பிட்டார்.
அண்மையில் துரைமுருகன் பேசிய ஒரு காணொலியை பார்த்ததாகவும், அதில், "அதிமுகவினர் ஒரே மாதிரி சட்டைக் கையை மடித்து விடுகின்றனர் இதற்கு தனியாக ஒரு PA வைத்திருப்பார்கள் போலும்" என அவர் கூற, அதைக் கேட்டு தான் சிரித்து விட்டதாக ஓபிஎஸ் கூறினார்.

தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசிய துரைமுருகன், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். என்ன பேசுவதென்று தெரியவில்லை, வார்த்தைகள் வரவில்லை எனக் கூறிய அவர், முதலமைச்சர் தீர்மானத்தை கொண்டுவந்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் பாராட்டி நெஞ்சம் நெகிழச் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

தன்மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டும் பாசம், அன்பு வார்த்தைகள் பார்த்து கிறுகிறுத்துப் போவதாகக் கூறிய துரைமுருகன், தந்தையின் பாசத்தை விஞ்சும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக தெரிவித்தார். நினைத்துப் பார்க்க முடியாத கௌரவத்தை, பாராட்டை முதலமைச்சர் தனக்கு வழங்கியுள்ளதாகக் கூறி, அதற்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என துரைமுருகன் கூறினார். முதல் முறையாக தனக்கு பேசத் தெரியவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக உணர்ச்சி வசப்பட்ட அவர், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவையை வணங்கியவாறு அமர்ந்துவிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மீது இவ்வளவு மரியாதை பாசம் வைத்திருப்பார் என சத்தியமாக தான் நினைத்து பார்க்கவில்லை என நெகிழ்ச்சியோடு பேசிய துரைமுருகன், வேறு இடமாக இருந்திருந்தால் அவரை அப்படியே கட்டிப்பிடித்து அழுதிருப்பேன் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments