மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்..! சிறப்பான தொண்டாற்ற வாழ்த்து..!

0 3209
மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்..! சிறப்பான தொண்டாற்ற வாழ்த்து..!

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள அவருக்குத் தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்துள்ள இல.கணேசன், அக்கட்சியில் தேசிய அளவிலான பொறுப்புக்களிலும் இருந்தவர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்துச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இல.கணேசன், மணிப்பூர் மக்களுக்குச் சிறப்பான முறையில் தொண்டாற்ற உள்ளதாகத் தெரிவித்தார்.

இல.கணேசனுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மணிப்பூர் மக்களுக்குச் சிறப்பான தொண்டாற்றவும், பணி சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும், நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான இல.கணேசனுக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசியில் தொடர்புகொண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் முருகன், தியாகராய நகரில் உள்ள இல.கணேசனின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இல.கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments