சிம்புகிட்ட கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா ? உஷா ராஜேந்தர் பதில்..! தவிப்பில் தயாரிப்பாளர்கள்

0 14402

சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் அவரது படப்பிடிப்பை நடக்கவிடாமல் தடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள உஷாராஜேந்தர், டிரிபிள் ஏ படத்தின் நட்டத்திற்காக ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி ஓசியில் படம் நடித்துக் கொடுக்க முடியாது என்று கூறி தயாரிப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்

சினிமா ஒன்றில் நடிகர் கவுண்டமணி தனக்கு கடன் தரவேண்டிய வடக்குப்பட்டி ராமசாமியிடம் பணத்தை வாங்குவதற்காக புறப்பட்டுச்சென்று கடுமையான தடங்கல்களை சந்திப்பார், அதே போன்ற தொரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு சிம்புவை வைத்து படம் தயாரித்த மற்றும் தயாரிக்க கோடிகளை கொட்டிக் கொடுத்த தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சிவசங்கரன், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திர போஸ்,பிடி செல்வக்குமார் மற்றும் டிரிபிள் ஏ படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சிம்பு கொடுக்க வேண்டிய பணத்துக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்து தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். பணத்தை வாங்கிக் கொண்டு படத்தை முடித்துக் கொடுக்காமல் கடுக்கா கொடுத்த சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது .

இதனால் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தனிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்படுமா ?என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளரை சந்தித்த நடிகர் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர், சிம்புவிடம் முரண்பட்ட 4 தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளின் நிலையை விளக்கினார், தயாரிப்பாளர் சிவசங்கரன் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது எனவும், திருப்பதி பிரதர்ஸிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டியதில்லை , அந்த பணத்திற்கு வட்டி ஏதுவும் கொடுக்கப்படவேண்டியதில்லை இருந்தாலும் மனிதாபிமானத்தோடு அதனை திருப்பி கொடுக்க இருப்பதாக ஒப்புக் கொண்டார் உஷா ராஜேந்தர்

பிடி செல்வக்குமார் உடனான பிரச்சனையை தாங்கள் பேசி தீர்த்துக்கொண்டதாக தெரிவித்த உஷாராஜேந்தர், டிரிபிள் ஏ படத்தின் நட்டத்திற்காக ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மைக்கேல் ராயப்பனுக்கு ஓசியில் சிம்பு படம் நடித்துக் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்ததோடு அதனை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்

சிம்பு தாயாரின் இந்த அதிரடி அறிவிப்பால் , தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு எப்படியும் சிம்புவைத்து படம் தயாரித்து ஈடு கட்டிவிடலாம் என்று ஆண்டுக்கணக்கில் காத்திருந்த மைக்கேல் ராயப்பன், வடக்குப்பட்டி ராமசாமியிடம் பணம் கொடுத்த கவுண்டமணி போல கையை பிசையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments